ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தை திரைத்துறையில் பிடித்துள்ளார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட வீடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையான முறையில் தொடங்கியிருக்கிறது. யோகிபாபு நடிக்கும் படத்தின் கதை ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதையாகும். காமெடியும் எமோஷனலும் கலந்த கதை இது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது.
நடிகர் ரவி மோகனின் தயாரிப்பில் “ப்ரோ கோட்” எனும் மற்றொரு படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில், நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகன் இப்போது விதவிதமான ஜானர்களில் நடித்து வருகிறார். பேன்டஸியா ‘ஜீனி’, அரசியல் ஜானராக ‘கராத்தே பாபு’, ஜாம்பி ‘மிருதன் 2’, கலகலப்பான ‘ப்ரோ கோட்’ என அடுத்தடுத்து அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார்.
