ரஷிய எண்ணெயை வாங்கக்கூடாது என இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா, இப்போது உலக நாடுகளிடம் கெஞ்சுவது ஏன்..? ஈரான் சாடல்

டெஹ்ரான்,

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்மூஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது. இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதி பதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரான் தோற்கடிக்கப்பட்டாலும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் ஏவுகணை, டிரோன்கள் கொண்டு தாக்கி அப்பகுதிகளில் கப்பல்களை செல்ல விடாமல் தடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுக்காப்பதற்காக அங்கு தங்களது போர்கப்பல்களை அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷிய எண்ணெயை வாங்கக்கூடாது என இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா, இப்போது உலக நாடுகளிடம் கெஞ்சுவது ஏன்..? என ஈரான் கேள்வி எழுப்பி உள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் தளத்தில், ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவை பல மாதங்களாக அமெரிக்கா கொடுமைப்படுத்தியது. ஆனால் ஈரானுடன் போர் தொடங்கி 2 வாரங்கள் கடந்த நிலையில், தற்போது ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நிலைமை பரிதாபகரமானது’ என அவர் சாடியுள்ளார்.

முன்னதாக இந்தியா, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கண்டித்த அமெரிக்கா, இதற்காக 25 சதவீத அபாரதம் விதித்து எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் இந்த அபராதத்தை கைவிட்டது. இந்த நிலையில் ஈரானுடன் கடந்த 28-ந் தேதி முதல் போர் புரிந்து வரும் அமெரிக்கா, இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை நிறைவு செய்வதற்காக ரஷியாவிடம் இருந்து 30 நாட்களுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி அளிப்பதாக அறிவித்தது. தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் தட் டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் கடுமையாக சாடி உள்ளது.

Source link