ராணிப்பேட்டை தொகுதியை தந்தை காந்திக்கு விட்டு கொடுத்த வினோத்… திமுகவில் புதிய திருப்பம்! – vinod gives ranipet assembly seat to dmk minister gandhi in 2026 election

2026 சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்கு அமைச்சர் காந்தியின் மகன் மோகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தந்தையே போட்டியிடுவதற்கு விட்டு கொடுத்திருப்பதாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ranipet Assembly Seat for DMK Minister Gandhi from Mohan(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மூன்று சிட்டிங் அமைச்சர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர்கள், காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ். அதேசமயம் காந்தியின் குடும்பத்தில் இருந்து அவரது மகன் மோகனுக்கு ராணிப்பேட்டை தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியிருந்தது. ஆனால் இந்த விஷயம் அமைச்சர் காந்திக்கு பிடிக்கவில்லை. ராணிப்பேட்டை தொகுதியை கேட்டு விருப்ப மனு அளித்தது நான் தான். மகனுக்கு சோளிங்கர் தொகுதியை கேட்டிருந்தேன்.

அமைச்சர் காந்தி, மகன் மோகன் இடையே மோதல்

அப்படியிருக்கையில் என்னுடைய தொகுதியை எடுத்து மகனுக்கு கொடுத்ததை ஏற்க முடியவில்லை என அதிருப்தியில் இருந்து வந்தார். ஏற்கனவே தந்தைக்கும், மகனுக்கும் இடையில் மோதல் போக்கு நிலவி வந்தது. தைலாபுரம் பிரச்சினையை போல நிலைமை கொஞ்சம் சீரியஸ் தான் என்கின்றனர். திமுகவில் 80 வயதை கடந்த துரைமுருகனுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு சீட் இல்லையா? என்ற அதிருப்தி குரலும் காந்தியிடம் இருந்து அறிவாலயம் வரை சென்றிருக்கிறது. ஆனால் வயது மட்டுமல்ல, காந்தி மீது வேறு சில சர்ச்சைகளும் இருப்பதை கருத்தில் கொண்டு தான், சீட் மறுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

இப்படியான சூழலில் மகன் மோகனின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை கூட இதுவரை நடத்தாமல் தள்ளி வைத்துள்ளனர். ஏனெனில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக இருப்பவர் அமைச்சர் காந்தி. இவரது தலைமையில் தான் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த விஷயம் திமுக தலைமை வரை ரிப்போர்ட்டாக சென்றிருக்கிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு ஒருவாரத்திற்கும் மேல் ஆன சூழலில், ராணிப்பேட்டையில் திமுக சார்பில் பிரச்சாரம் களைகட்டாமல் இருப்பது உடன்பிறப்புகள் மத்தியில் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

காந்திக்கு சீட்டை விட்டு கொடுத்த மகன்

இந்நிலையில் தனது தந்தைக்கு சீட்டை விட்டுக் கொடுக்க மோகன் முன்வந்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வினோத், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு அளித்து மிகவும் நம்பிக்கை உடன் தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், என் தந்தை மீண்டும் போட்டியிடும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறார்.

திமுகவில் நல்ல எதிர்காலம் – மோகன் நம்பிக்கை

இதைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறேன். என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார். திமுகவில் தனக்கான எதிர்காலம் பெரிதாக இருக்கிறது. அரசியல் ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் வாய்ப்புகள் நிறைய வரக்கூடும். அந்த உற்சாகத்தில் நம்பிக்கை உடன் காத்திருக்க தயார் என்று மோகன் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் காந்தியின் தேர்தல் செயல்பாடுகள்

அமைச்சர் காந்தியை பொறுத்தவரை 1996, 2001, 2006, 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 2001, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மட்டும் தோல்வியை தழுவினார். மற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று 4 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். முதல்முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பதவி கிடைத்தது.