ராமநாதபுரத்தில் சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் கைது

ராமநாதபுரம்,

இணையவழி குற்றப்பிரிவு தலைமையகத்தால் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால சைபர் கண்காணிப்பு மற்றும் தீவிர விசாரணையின் போது, ஆன்லைன் முதலீட்டு மோசடி சைபர் குற்றங்களால் ஏமாற்றி பெறப்பட்ட ரூபாய் 1.36 கோடி பணத்தை வெளிநாட்டு சைபர் குற்ற வலையமைப்புகளுக்கு அனுப்பி வந்த குற்ற வலைப்பின்னலின் அங்கமாக செயல்படுட்ட குழு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இணையவழி குற்றபிரிவு-1, காவல் கண்காணிப்பாளர் ஷஹ்நாஸ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு குற்றவாளிகளை கைது செய்தது.

மேலும் போலீசார் நடத்தி தீவிர விசாரணையில், 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் இந்தக்குழு சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள சைபர் குற்ற வருவாயை கிரிப்டோகரன்சியாக மாற்றி, சர்வதேச சைபர் குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள வாலெட்டுகளுக்கு மாற்றியுள்ளது தெரியவந்தது. இந்த வலையமைப்பில் தொடர்புடைய பிற உறுப்பினர்களை அடையாளம் காணவும், சைபர் குற்றச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள பெரிய அளவிலான குற்ற கும்பலை கண்டறியவும் தொடர் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் அவர்கள் இந்தபெரிய அளவிலான சர்வதேச கிரிப்டோகரன்சி மோசடி கும்பலை கைது செய்த சிறப்புகுழுவின் முயற்சிகளை பாராட்டினார். மேலும், சட்டவிரோத கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை எளிதாக்குதல் அல்லது ஏதேனும் விதத்தில் சைபர் குற்ற வலையமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுதல் ஆகியவகைகளில் சர்வதேச சைபர் குற்றக்குழுக்களுக்கு உதவி செய்யும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில், போலியான முதலீட்டு திட்டங்கள், மோசடியான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் டிஜிட்டல் கைது எனப்படும் சைபர் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையத்தின் மூலம் நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாகசைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது தேசிய சைபர் கிரைம் புகார் தளம் www.cybercrime.gov.in வழியாக புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Source link