சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராம் சரண் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராம் சரணுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ‘பெத்தி’ படத்தின் பிரத்யேக ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், ராம் சரணின் சிறு வயது புகைப்படங்களை பகிர்ந்து சிரஞ்சீவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
