கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், பாஜக சார்பில் நேமம் தொகுதியில் போட்டியிட ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 93 கோடிக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ. 107 கோடி அளவிலான கடன், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கடனும் இருப்பதாகக் அதில் கூறியுள்ளார். இந்த நிலையில், பெங்களூரு கோரமங்கலாவில் உள்ள ரூ.200 கோடி மதிப்பிலான பங்களாவை பிரமாணப் பத்திரத்தில் ராஜீவ் சந்திரசேகர் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “நேமம் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர், பெங்களூரு, கோரமங்களா 3வது பிளாக்கில் உள்ள தனது 49,000 சதுர அடி பங்களா குறித்த தகவலைத் தனது பிரமாணப் பத்திரத்தில் வெளியிடவில்லை.1.07 ஏக்கர் சொத்து ஆகும், இங்கு ஒரு சதுர அடி நிலத்தின் விலை சுமார் ரூ. 35,000 முதல் ரூ. 50,000-க்கும் விட அதிகம். தோராயமாக ராஜீவ் சந்திரசேகர் நிலத்தின் மதிப்பு ரூ.200 கோடியாக இருக்கும். கடந்த மார்ச் 17 அன்று இந்த பங்களாவுக்கு சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது.
இது பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருடையது தானா என்பதில் சந்தேகம் இருப்பின், அவருடைய 2024 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், ‘408, கோரமங்களா 3வது பிளாக்’ என்ற முகவரியை அவரது வசிப்பிடமாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கோடீஸ்வர தொழிலதிபராக இருந்தபோதிலும், அவருக்குச் சொந்தமாக பங்களாவோ, கார் இல்லை என்று பிரமாணப் பத்திரம் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறதா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவது உண்மையாகிவிடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

