ரூ.51 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை! – election flying squad seizes silver anklet worth rs 51 lakh in erode district

சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.51 லட்சம் மதிப்புள்ள 18.700 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கொலுசுகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை பணிகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி அதிகளவு பணம் அல்லது பொருட்களை எடுத்துச் செல்லுதல் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

18.700 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

இந்த நிலையில், இன்று (மார்ச் 24 ஆம் தேதி) சத்தியமங்கலம் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பாக திம்பம் மலைப் பாதை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. அந்த நேரத்தில், கேரள பதிவெண் கொண்ட ஒரு காரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் இருந்த பைகளை திறந்து பார்த்த போது, அதில் 18.700 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதில் கொலுசுகள், ஜிமிக்கி, அலங்கார நகைகள் மற்றும் கவரிங் நகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன. இந்நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.51 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி நகை வியாபாரியிடம் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து காரில் இருந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நெல்சன் என்பதும், வெள்ளி நகை தயாரிப்பு மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அந்த நகைகளை பெங்களூருக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இவ்வளவு மதிப்புள்ள நகைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால், தேர்தல் விதிமுறைகளின்படி அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தை அலுவலர் சுதாகரனிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் சோதனை

இதற்கு இணையாக, பண்ணாரி சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வாகன சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றன. அந்த சோதனைகளில் கர்நாடகத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தாளவாடி அருகே உமர்ந்தாத் என்பவரிடமிருந்து ரூ.1,38,200 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகைகள் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக கண்டறியப்பட்டதால் அவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்திலும் சோதனை

அரசூர், அத்தாணி சாலை, கொள்ளேகால் பிரிவு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணேசன், செல்வராஜ், மயில்சாமி, பிரபு, குமார் உள்ளிட்டோரிடமிருந்து தொகுதியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அரசு பேருந்தில் பயணம் செய்த புளி வியாபாரி சின்னண்ணன் என்பவரிடமிருந்தும் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு மொத்தமாக சுமார் ரூ.7 லட்சத்து 34 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தை அலுவலர் ஜமுனா ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பீகார் தேர்தல் முடிவுகள்: வாக்குகள் களவாடப்பட்டுள்ளது- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தை அலுவலர் சுதாகர் விளக்கமளிக்கையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பணம் அல்லது பொருட்களை எடுத்துச் செல்லும்போது அவற்றிற்கு உரிய ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.