சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (02.02.2026) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோட்டூர், மாநகராட்சி விளையாட்டுத் திடலை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.7.05 கோடி செலவில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள கோட்டூர் விளையாட்டுத் திடலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்து, பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து பார்வையிட்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய விளையாட்டுத் திட்டங்கள் மற்றும் நவீன சமூக நலக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தொடர்ந்து சென்னை மாநகராட்சியும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமமும் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பகுதியில், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலுடனும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபுவின் நிதி பங்களிப்புடனும், ரூபாய் 7 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் இந்த விளையாட்டு திடல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், புதிய வசதிகளாக நிர்வாக அறை, உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டு அரங்கம், குத்துச்சண்டை வளாகம், குத்துச்சண்டை பயிற்சி அறை, பார்வையாளர்களுக்கான அமர்விடம், வெளிப்புற உடற்பயிற்சி பகுதி, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கண்காணிப்பு கேமராக்கள், 200 மீட்டர் நீள நடைபாதை, இருசக்கர வாகன நிறுத்துமிடம், 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்கம் மற்றும் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 உயர்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருடன், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உயர் அலுவலர்கள், இந்த மண்டலத்தின் வார்டு குழு தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இந்த விளையாட்டு திடலை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
ஆயிரக்கணக்கான கோட்டூர் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இந்த வசதிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் நடைபாதை பயிற்சி, உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி, சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், கால்பந்து மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
சுமார் 1.30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு திடலில், 3,200 சதுர அடியில் பல்வேறு கட்டிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களிலும் விளையாட்டு திடலை பயன்படுத்தும் வகையில் போதுமான மின்வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், சைதாப்பேட்டை கோட்டூர் பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையான ஒன்று தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ. பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அப்தாப் ரசூல், அடையார் மண்டலக் குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், சிஎம்டிஏ தலைமைப் பொறியாளர் வெங்கடேசன், கண்காணிப்பு பொறியாளர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
