ரோட்டர்டம் திரைப்பட விழா- நெட்பாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “மயிலா”

நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசிய நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு நெட்பாக் (ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான நெட்வொர்க்) விருது வழங்கப்படுகின்றது. இந்த விருதுக்கு இயக்குநர் செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான “மயிலா” திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, இயக்குநர் பா. ரஞ்சித்தின் “நீலம் புரோடக்ஷன்ஸ்” நிறுவனம் வழங்கியுள்ளது.

ஏற்கெனவே, ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட “மயிலா” படம் பெரும் வரவேற்புகளைப் பெற்றிருந்தது. இப்படத்தில், நடிகர்கள் பி. மெலடி டோர்காஸ், சுடர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்துடன், இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்மணி, மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், சில்லுக் கருப்பட்டி, வலிமை, கள்வன், ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை, யாத்திசை, மாவீரன், அயலான், அந்தகன் எனத் தொடர்ந்து தன் யதார்த்தமான நடிப்பால் ரசிக்கர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் நடிகை செம்மலர் அன்னம். இயக்குநராக வேண்டும் என்றக் கனவுடன் சென்னைக்கு வந்தவர், நடிக்கத் தொடங்கி, நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் செம்மலர் அன்னம் கூறுகையில், “இந்த நெட்பாக் பரிந்துரை எங்கள் முழுக் குழுவிற்கு மிகவும் அர்த்தமுள்ள அங்கீகாரமாகும். ‘மயிலா’ திரைப்படத்தை ஆழ்ந்த அக்கறையுடனும் நேர்மையுடனும் உருவாக்கினோம். ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் கவனிக்கப்படுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.

Source link