பெய்ரூட்
லெபனான் நாட்டில் ஐ.நா.வின் அமைதி காப்பாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் வாகனத்தில் சென்றபோது பனி ஹய்யன் என்ற இடத்திற்கு அருகே அடையாளம் தெரியாத இடத்தில் இருந்து குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. இதில், அந்த வாகனம் வெடித்து, உருக்குலைந்து போனது.
இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த அமைதி காப்பாளர்கள் 2 பேர் சிக்கி படுகாயம் அடைந்து பலியானார்கள். இதுதவிர ஒருவருக்கு பலத்த காயமும், மற்றொரு நபருக்கு காயமும் ஏற்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2-வது சம்பவம் இதுவாகும். இதற்கு லெபனானில் உள்ள ஐ.நா. அமைப்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில், அமைதியை காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது ஒருவரும் இறக்க கூடாது. துணிச்சலான பணியில் ஈடுபட்டு இருந்தபோது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் என அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. தெற்கு லெபனானின் அத்சித் அல் குசாயர் நகரருகே ராக்கெட் தாக்கியதில் ஐ.நா. அமைதி காப்பாளர் ஒருவர் பலியானார். மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த சூழலில், மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
