லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போர் நிறுத்தத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதா?

படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக இரான் கூறியுள்ளது (படத்தில், இடதுபுறம் – இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் வலதுபுறம் – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு).

15 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்து 24 மணிநேரமே ஆகியுள்ள நிலையில், அந்த அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தெளிவாகத் தெரிகின்றன.

லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவதும் இந்த போர்நிறுத்த நிபந்தனைகளில் அடங்கும் என்று இரானும், மத்தியஸ்த நாடாகச் செயல்பட்ட பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.

ஆனால், லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் லெபனானில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் தொடங்கியதிலிருந்து ஹெஸ்பொல்லாவுக்கு ஏற்பட்ட “மிகப்பெரிய பின்னடைவு” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களை விவரித்தார்.

மேலும், “தேவைப்பட்டால், இரானுக்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கும்” என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், லெபனான் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், எதிரிகள் ‘வருந்தும்’ வகையிலான பதிலை அளிக்கப்போவதாக இரான் எச்சரித்துள்ளது.

இரானின் குற்றச்சாட்டு

படக்குறிப்பு, இரானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் வீதிகளில் இறங்கினர் (படம்: ஏப்ரல் 8, 2026)

சனிக்கிழமையன்று, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.

பெர்சிய வளைகுடாவிற்குச் செல்லும் மிக முக்கியமான கடல்வழிப் பாதையாகவும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு அவசியமானதாகவும் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவது இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியப் புள்ளியாக இருக்கும்.

தனது அனுமதியின்றி எந்தவொரு கப்பலாவது இந்த வழியாகச் சென்றால், அது ‘குறிவைக்கப்பட்டு அழிக்கப்படும்’ என்று இரான் கூறியுள்ளது.

இதற்கிடையில், 10 அம்ச போர்நிறுத்த முன்மொழிவின் மூன்று நிபந்தனைகள் ஏற்கனவே “வெளிப்படையாக மீறப்பட்டுள்ளதாக” இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறுகிறார். ஆனால், இத்தகைய ஒப்பந்தங்களில் சில “குழப்பங்கள்” ஏற்படுவது இயல்பானது என்று ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டார்.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், “இரான்-அமெரிக்க போர்நிறுத்த நிபந்தனைகள் தெளிவானவை மற்றும் சந்தேகத்திற்கு இடமற்றவை. இப்போது அமெரிக்கா தான் தீர்மானிக்க வேண்டும், ஒன்று போர்நிறுத்தம், அல்லது இஸ்ரேல் மூலம் போரைத் தொடர்வது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. லெபனானில் அரங்கேறும் படுகொலைகளை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இப்போது முடிவு அமெரிக்காவின் வசம் உள்ளது, மேலும் அது தனது வாக்குறுதிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுகிறதா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

டிரம்பின் புதிய அறிவிப்பு என்ன?

உண்மையான ஒப்பந்தம் முழுமையாக பின்பற்றப்படும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும் என இரானைக் குறிப்பிட்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், “உண்மையான ஒப்பந்தம் முழுவதும் பின்பற்றப்படவில்லை என்றால் இதற்கு முன்னர் யாரும் பார்த்திராத பெரிய, சிறந்த மற்றும் வலுவான தாக்குதல் தொடங்கும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்தப் பதிவில், “உண்மையான ஒப்பந்தம் முழுவதுமாக பின்பற்றப்படும் வரை ஏற்கெனவே முழுவதுமாக பாழடைந்த எதிரியின் (இரான்) அழிவுக்குத் தேவையான அனைத்து அமெரிக்க கப்பல்கள், விமானங்கள், ராணுவ வீரர்கள் கூடுதல் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் உடன் இரானைச் சுற்றி இருப்பார்கள். எந்தக் காரணத்திற்காகவும் அவ்வாறு நடக்கவில்லையென்றால், அதற்கான சாத்தியம் குறைவு தான் என்றாலும் இதற்கு முன்பு யாரும் பார்த்திராத பெரிய, சிறந்த மற்றும் வலுவான தாக்குதல் தொடங்கும்.” என கூறியுள்ளார்.

இரானின் கூற்றுகளை நிராகரித்த அவர், “எந்த அணு ஆயுதமும் கிடையாது (இரானுக்கு) மற்றும் ஹோர்மூஸ் நீரிணை திறந்தும் பாதுகாப்பாகவும் இருக்கும். இதற்கிடையே நமது சிறந்த ராணுவம் தயார் நிலையில் ஓய்வெடுத்து அடுத்த வெற்றியை எதிர்பார்த்து இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

“10 நிமிடங்களில் 100 இலக்குகள்”

நிக் பீல், ஜெருசலேமில் இருந்து பிபிசி செய்தியாளர்

படக்குறிப்பு, கடந்த சில மணிநேரங்களில், லெபனானின் தலைநகரான பெய்ரூட் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய கடுமையான வான்வழித் தாக்குதல்களில் 180க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமையன்று, லெபனானில் உள்ள 100 இலக்குகளை வெறும் 10 நிமிடங்களில் தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கிடையில், தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் தான் பதிலடி கொடுப்பதாக இரான் தெளிவான எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம், பிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேல் தனது இரான் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் அவரைப் பொறுத்தவரை, லெபனான் என்பது ‘ஒரு தனிப்பட்ட மோதல்’.

ஒரு கேள்விக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், லெபனான் இந்த போர்நிறுத்தத்தின் ஒரு பகுதி அல்ல என்று கூறினார்.

கடந்த ஆறு வாரங்களில், லெபனானில் நடந்து வரும் போரில் 130 குழந்தைகள் உட்பட 1,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இரான் மீது ஒரு கூட்டுத் தாக்குதலைத் தொடுக்குமாறு அமெரிக்க அதிபரைச் சம்மதிக்க வைப்பதன் மூலம், இரானிய ஆட்சியை வீழ்த்துவது என்ற தனது நீண்டகால அரசியல் லட்சியத்தை அடைய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எண்ணினார்.

ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

இஸ்ரேலின் சம்மதம் இல்லாமலேயே போர்நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நெதன்யாகு தனது போர் இலக்குகளில் தோல்வியடைந்துவிட்டார் என்றும், பேச்சுவார்த்தை மேசையில் தனக்கு ஒரு இடத்தைப் பெறவில்லை என்றும், இப்போது முன்னெப்போதையும் விட பழிவாங்கும் எண்ணம் கொண்ட மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு இரானை மட்டுமே அவர் உருவாக்கியுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், இரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்திவிட்டு , பின்வாங்கும் அதிபர் டிரம்பின் முடிவு குறித்த தகவல் தனக்குக் கடைசி நிமிடத்தில் தான் கிடைத்தது என்ற செய்தியையும் நெதன்யாகு மறுத்து வருகிறார்.

தேவைப்பட்டால் இரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தயாராக இருக்கும் என்றும் நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால் தற்போதைக்கு, லெபனானில் ஹெஸ்பொல்லா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், அதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்புகளும் அழிவுகளும் இந்த பலவீனமான போர்நிறுத்தத்தைச் சிக்கலுக்குள்ளாக்குகின்றன.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link