தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. மேலும் சசிகலா – ராமதாஸ் அணியும் களத்தில் உள்ளது.
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுகவும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அதிமுகவும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சியினரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் என் டி ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டம் அவுரி திடல் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ” நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் மக்கள் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு என்னை பற்றி அவதூறு பேசுவதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேலையா போச்சு.. நமது கட்சி பிஜேபிக்கு அடிமை என்கிறார் ஸ்டாலின். என் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது.
மின்னல் திரைப்படத்தில் வடிவேலு கட்டதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கட்டத்துரை போல தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும். கட்டதுரை திருந்துற மாதிரியே இல்ல.. நாகரிகம் கருதி அந்த நகைச்சுவையை நான் சொல்லல.. எஞ்சிய வார்த்தைகள நீங்களே பூர்த்தி செய்திடுங்க.. என்றார்.
மேலும் சாக்கடை போல பேசுகிறோம் என திமுகவினர் எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் உண்மையான சாக்கடை அவர்கள் தான். தீயசக்தி திமுகவை தமிழத்தில் வேரோடு ஒழிக்க வேண்டும். புரட்சி தலைவர் எம்.ஜி ஆரும், அம்மா ஜெயலலிதாவும் மக்களுக்காக உழைத்தவர்கள். அவர்களுக்கு நம் மக்கள் தான் வாரிசு. ஆனால் கருணாநிதி தன் குடும்பத்தை மட்டுமே பார்த்துக் கொண்டார். நாட்டு மக்களை அல்ல. திமுகவில் தன் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது” என்றார்.
