திமுகவில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள்
வட தமிழகத்தில் திமுகஏன் பலமாக இருக்கிறது என்ற கேள்வி எழக்கூடும். அதற்கு செல்வாக்கு பெற்ற உள்ளூர் தலைவர்களும், கட்சியை அடிமட்டம் வரை வேரூன்ற செய்த உடன்பிறப்புகளின் தீவிர களப் பணிகளும் முக்கிய காரணங்களாக திகழ்கின்றன. உதாரணமாக வேலூரில் துரைமுருகன் என்றால், திருவண்ணாமலையில் எ.வ.வேலு முக்கியமான நபர். கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்றால் சென்னையில் மா.சுப்பிரமணியன் முதல் தா.மோ.அன்பரசன் வரை லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
2026 தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் பரபரப்பாக வெளியான தகவல்?
இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தலைநகரில் தான் எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். இதேபோல் அதிமுகவிலும் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் இருக்கின்றனர். ஆனால் தேர்தல் களத்தில் தொடர்ச்சியாக வெற்றி வாய்ப்புகளை தேடி குவித்ததில்லை. இது திமுகவிற்கு பலமாக மாறியிருக்கிறது. வட தமிழகத்தில் சமூக ரீதியிலான கணக்கை எடுத்துக் கொண்டால் வன்னியர்களும், தலித்களும் கிட்டதட்ட 55 சதவீத அளவிற்கு வசித்து வருகின்றனர்.
வட தமிழகத்தில் விசிக, பாமகவின் முக்கியத்துவம்
இதில் தலித்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விளங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2026 தேர்தலில் திமுக உடனும், வன்னியர்கள் மத்தியில் செல்வாக்குள்ள பாமகவானது அதிமுக உடனும் கூட்டணி அமைத்திருக்கிறது. இதில் இருக்கும் சிக்கல் என்பது ராமதாஸ், அன்புமணி தலைமையில் பாமக இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. எனவே வன்னியர்களின் வாக்குகள் முழுமையாக அதிமுக கூட்டணிக்கு போய் சேருமா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இருப்பினும் கட்சியும், மாம்பழம் சின்னமும் இந்திய தேர்தல் ஆணைய பதிவுகளின் படி அன்புமணி வசமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரவிருக்கும் தேர்தலில் எவ்வாறு வாக்குகளாக மாறும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. இதுதவிர சிறுபான்மையினர் வாக்குகளும் பரவலாக காணப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணியால் இந்த வாக்குகள் திமுகவிற்கு கிடைக்கும் சூழல் நிலவுகிறது. அதேசமயம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் திமுகவிற்கு செல்லும் சிறுபான்மையின வாக்குகள் பிளவுபடும். ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 15 தொகுதிகளில் இஸ்லாமிய வாக்குகள் கணிசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தவெக வருகையால் மாறப் போகும் தேர்தல்
சிறுபான்மையின வாக்குகள் மட்டுமின்றி, வன்னியர்களின் வாக்குகளும் விஜய்க்கு மாறும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதேசமயம் தவெகவின் கட்டமைப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே காகிதத்தில் போடப்படும் கணக்குகள், தேர்தல் களத்தில் அப்படியே எதிரொலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் 10 ஆண்டுகால தேர்தல் அரசியலில் 8 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நடப்பு தேர்தலில் களம் காணும் சீமானின் நாம் தமிழர் கட்சியானது வன்னியர்கள், தலித்கள், சிறுபான்மையினர் வாக்குகளை எந்த அளவிற்கு ஈர்க்கப் போகிறது என்பதும் முக்கியமானது.
இவ்வளவு விஷயங்களை தாண்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சில வியூகங்களை வகுத்துள்ளார். குடும்ப அரசியல், ஆட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி வருகிறார். ஆனால் இவை அனைத்தும் பொதுவான விமர்சனங்களாகவே இருப்பதால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா? என்பது கேள்விக்குறி தான்.
