வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் – பிரியங்கா காந்தி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

திருவனந்தபுரம்,

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி பெருமழையை தொடர்ந்து வயநாடு மாவட்டத்தில் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர்.

உறவுகளையும் உடமைகளையும் கண்முன்னே பறிகொடுத்து உயிர் தப்பிய நூற்றுக்கணக்கானவர்களின் அழுகுரல் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இந்த பேரழிவானது மக்களின் மனதில் நீங்காத வடுவாக பதிவாகி உள்ளது.

நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உருக்குலைந்தன. வீடுகள் புதையுண்டதோடு, பாலங்கள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிக்கு வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய பிரியங்கா காந்தி, “வயநாட்டில் மிகப்பெரிய துயரம் நம்மை பாதித்தது. இங்குள்ள மக்கள் நிலச்சரிவில் அனைத்தையும் இழந்தாலும், அவர்களின் தைரியத்தை இழக்கவில்லை.

மதம், சாதி என அனைத்து பிரிவுகளையும் கடந்து அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக நின்றனர். அந்த சமயத்தில் எனது சகோதரர் ராகுல் காந்தி வயநாடு எம்.பி. ஆக இருந்தார். தற்போது நான் உங்கள் குடும்பத்தில் இருவராக மாறிவிட்டேன். நீங்கள் கடந்து வந்த கஷ்டங்களை உங்களுடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் குரல் கொடுத்தோம். பிரதருக்கு கடிதம் எழுதினோம், போராட்டம் நடத்தினோம். உங்களுக்கு ஆதரவாக இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இதில் பல அரசியல் கட்சிகள் ஒன்றாக நின்றனர். உங்களுக்கு ஆதராக என்றும் உங்களுடன் நாங்கள் நிற்போம்” என்று தெரிவித்தார்.

Source link