கடந்த ஆறாம் தேதி புதுச்சேரியில் பரப்புரைக்கான கடைசி நாள் என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் புதுச்சேரி பரப்புரையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றாக தோன்றி பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தனித்தனியாக வந்து பிரச்சாரம் மேற்கொண்டு சென்றுவிட்டனர்.
முதல்வரை அப்செட் செய்த ராகுல்
ஏற்கனவே புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருக்கக்கூடிய திமுகவை எதிர்த்து ஐந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது Friendly Fight என காங்கிரஸ் தரப்பில் வர்ணிக்கப்பட்டாலும் இது வெற்றியின் சிதைவுக்கு வழிவகுக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் புதுச்சேரி வந்த ராகுல் காந்தி திமுக தலைமையை கடுப்பேற்றும் பல வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ராகுலை சந்திக்க நேரம் கேட்டும் கடைசி நேரம் வரை இழுத்தடித்து ஸ்டாலினை சந்திக்காமலே சென்றிருக்கிறார்.
- மு.க ஸ்டாலின் பிரச்சாரங்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் பாண்டிச்சேரியில் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை மட்டுமே மேடையேற்றி வாக்கு சேகரித்து இருக்கிறார், இது திமுகவினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
- மேலும் புதுச்சேரியில் திமுகவிற்கு எதிராக களம் காணும் ஐந்து வேட்பாளர்களையும் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
- அதோடு மட்டுமல்லாது தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் ஒருவரான ஆதவ் அர்ஜுனா ராகுல் காந்தி தமிழக வெற்றிக்கழகத்துடன் தான் கூட்டணி வைக்க விருப்பப்பட்டார் என பகிரங்கமாக பேசி இருக்கிறார். ஆனால் இதுவரை அந்த பேச்சை மறுத்தோ எதிர்த்தோ காங்கிரஸ் தலைமையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
போதாக்குறைக்கு காங்கிரஸ் எம்.பி -க்களே திமுக -விற்கு போதுமான டேமேஜை ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் அருந்ததியினர் சமூக மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேசியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் ‘மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்பது போல தான் உள்ளது” திமுக நிலைமை.
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் மக்கள் திமுக கூட்டணியின் மீது நம்பிக்கை ஏற்ற தன்மையை அடைவார்கள். ஏற்கனவே கட்டக்கடைசியான நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி திமுக அவர்களை தக்க வைத்தது.
போற போக்கை பார்த்தால் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் பல விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகை புரிந்தாலும் புதுச்சேரியை போல தமிழகத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்களை மட்டும் மேடை ஏற்றி பிரச்சாரம் மேற்கொண்டால் அது மேலும் பல விதமான பின்னடைவுகளை திமுக கூட்டணிக்கு ஏற்படுத்தும்.
