சென்னை,
ஈரான், வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய தூதரக உதவி எண்களை சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தினால் சிக்கி தவிக்கும் சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர்களை மீட்க ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தின் காரணமாக ஈரானில் இருந்து தாயகம் திரும்ப இயலாத நிலையில் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களைச் சார்ந்த இந்திய மீனவர்கள் அந்நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர். இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 595 மீனவர்கள் அந்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கி உள்ளனர்.
சென்னை மாவட்டம், எண்ணூர், இந்திராகாந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் மகன் முத்துகுமரன் மீன்பிடி தொழில் மேற்கொள்ள கடந்த 2025-ம் ஆண்டு தரங்கம்பாடியில் இருந்து ஈரான் நாட்டிற்கு சென்று, தற்போது அவ்விடத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்து வருவதாக கடந்த 9-ந் தேதி வாட்ஸ்அப் அழைப்பின் மூலம் தெரிவித்து தம்முடன் தங்கியுள்ள மீனவர்களையும் மீட்டு தாயகம் அழைத்துவர வேண்டியுள்ளார்.
எனவே, ஈரான் நாட்டில் சிக்கியுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் கீழ்க்கண்ட ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
துபாய் / ஐக்கிய அரபு நாடுகள் +971 543090571 (வாட்ஸ்-அப்), 800 46342 (24/7 தொலைபேசி உதவி எண்), ரியாத் / சவுதி +966 542126748 (வாட்ஸ்-அப்), +966 11 4884697 (24/7 தொலைபேசி உதவி எண்), ஜெடா / சவுதி +966 536209704 (வாட்ஸ்-அப்), +966 12 6648660 (24/7 தொலைபேசி உதவி எண்), டெஹ்ரான் / ஈரான் +98 9128109115 (வாட்ஸ்-அப்), +98 9128109109/+98 9128109102 (24/7 தொலைபேசி உதவி எண்), டெல் அவீவ் / இஸ்ரேல் +972 54 7520711 (வாட்ஸ்-அப்), +972 54 2428378/ 03 5226748 (24/7 தொலைபேசி உதவி எண்), மஸ்கட் / ஓமன் +968 98282270 (வாட்ஸ்-அப்), 800 71234 (24/7 தொலைபேசி உதவி எண்), டோஹா / கத்தார் +974 55647502 (24/7 தொலைபேசி உதவி எண்) என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அதே போன்று, குடியுரிமை பெறாத தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் சென்னை அல்லது திருச்சி விமானநிலையத்தை வந்தடைய தமிழ்நாடு அரசின் பின்வரும் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. உதவி எண் : +91 1800 309 3793 (இந்தியாவில் உள்ள இலவச அழைப்பு எண்), +91 96000 23645 (வாட்ஸ்-அப்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், nr********@****ov.in/nr********@***il.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
இது தவிர நேரடி உதவிக்கு, குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நல ஆணையரகம், எழிலகம் அனெக்ஸ், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
