விஜய்க்கு எனது பிறந்த நாள் பரிசு தூத்துக்குடி வெற்றிதான்.. தவெக வேட்பாளர் ஶ்ரீநாத் நெகிழ்ச்சி! – srinath says he wants to birthday gift tvk vijay with victory in thoothukudi constituency

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடி தவெக வேட்பாளர்

இதற்கு இணையாக, நடிகர் விஜய் தலைமையில் புதியதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

பூர்வீகம் தூத்துக்குடி

ஸ்ரீநாத் தற்போது தூத்துக்குடி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னையில் வசித்து வந்தாலும், தூத்துக்குடி தான் தனது பூர்வீகம் என்பதால், இந்த முறை தனது சொந்த ஊரில் போட்டியிடுவது தனக்கு பெருமை அளிப்பதாக அவர் தெரிவிக்கிறார். மக்கள் மத்தியில் நேரடியாக சென்று பேசும் முறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்.

விஜய் சமீபத்தில் தூத்துக்குடி வந்தபோது ஏற்பட்ட பெரும் மக்கள் திரளே தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்கும் என ஸ்ரீநாத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அந்த கூட்டம் வெறும் காட்சி அல்ல, அது ஓட்டாக மாறும் எனவும் அவர் கூறுகிறார்.

விஜய்யை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

மக்கள் விஜய்யின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும், இதுவரை நம்பிய அரசியல் தலைவர்கள் அந்த நம்பிக்கையை காப்பாற்றவில்லை என்பதால், தற்போது புதிய மாற்றத்திற்காக விஜய்யை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் போல ஒரு புதிய தலைவரை மக்கள் பார்க்கிறார்கள் என்ற உணர்வை தன்னால் நேரடியாக காண முடிகிறது எனவும் கூறினார்.

விஜய்யின் பிறந்தநாள் பரிசு

சினிமாவில் விஜய்யுடன் பயணித்த அனுபவம் அரசியலிலும் தொடர்கிறது என்றும், நண்பனாக கிடைத்த இந்த வாய்ப்புக்கு பதிலாக வெற்றியை மட்டுமே பரிசாக வழங்க விரும்புகிறேன் என ஸ்ரீநாத் கூறினார். வருகிற ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வெற்றியை அவருக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.

தூத்துக்குடி தொகுதியைத் தேர்வு செய்தது குறித்து பேசும்போது, இது தான் தனது பிறந்த ஊர் என்றும், உணர்ச்சிப் பிணைப்பால் இந்த மண் தன்னுடன் இணைந்துள்ளது என்றும் அவர் கூறினார். குடும்பத்தினரும் நண்பர்களும் இங்கு இருப்பதால், மக்களின் நலனில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணமே இந்த முடிவுக்குக் காரணம் எனவும் விளக்கினார்.

திமுகவின் கோட்டை?

இந்த தொகுதி திமுகவின் பலமான கோட்டையாக இருந்தாலும், தற்போது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காலம் மாறுகிறது, அதற்கு ஏற்ப மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.

திருச்சியில் தவெக செஞ்ச மாஸ் சம்பவம்!

தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடியில் பெரிய அளவில் வளர்ச்சி எதுவும் நடைபெறவில்லை என்றும், சிறுவயதில் இருந்த நிலையே இன்னும் தொடர்கிறது எனவும் அவர் விமர்சித்தார். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Source link