நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டு எனப் படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்பிவைத்தது. இதற்கிடையில், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியது. கடந்த மார்ச் 9-ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறு ஆய்வு குழுவினர் நாளை பார்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு தணிக்கை வாரியம் அழைப்பு விடுக்கவுள்ளது.தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை வெளியாகாமல் ‘ஜனநாயகன்’ திரைப்படம் முடங்கிக் கிடக்கிறது. நாளை மறு ஆய்வு நடக்காவிட்டால் வரும் 19ல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தேர்தலுக்கு பின்னரே திரைப்படம் வெளியாகும் சூழல் நிலவுகிறது.
