நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட்டு எனப் படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப்பெற்று மறுதணிக்கைக்குப் படத்தை அனுப்பிவைத்தது. கடந்த மார்ச் 9-ஆம் தேதி மறுஆய்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குழு உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அன்றைய ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தை மறு தணிக்கை குழு இன்று பார்வையிடுகிறது. இதில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டால், படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
அதன்படி, தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்து சென்சார் சான்றிதழ் வழங்கினால், தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகிய பின்னர் மே 7ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
