விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்.. குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் – minister anbil mahesh meets parents of tvk vijay fan who died in thanjavur accident

கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் கலந்துக்கொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த மாணவர் விக்னேஷ் என்பவர் விபத்தில் சிக்கினார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். இந்நிலையில் விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறியுள்ளார்.

விக்னேஷின் தந்தை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சி வந்தார். தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர் வரும் வாகனத்தை, தொண்டர்கள் பின்தொடர்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தஞ்சையில் ஏற்பட்ட விபத்து

அந்த வகையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்த தவெக விஜய்யை பார்ப்பதற்கு ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாமென பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திலும் விஜய் வந்த வாகனத்தை ரசிர்கள் பின்தொடர்ந்தனர். அப்போது விக்னேஷ், ஆரோன் என்ற இளைஞர்கள் இருவரும் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ்
இதனால் படுகாயம் அடைந்த விக்னேஷ், ஆரோன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் விக்னேஷுக்கு தலையில் பலத்த அடியும், ஆரோனுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விக்னேஷ் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
இதனிடையில் பால் வியாபாரியான விக்னேஷின் தந்தை, கல்லூரிக்கு போவதாக சொல்லிவிட்டு தனது மகன் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்துக் கொண்டதாக வேதனையுடன் தெரிவித்தார். பால் வியாபாரியான தான் கடன் வாங்கி விக்னேஷை காப்பாற்ற வேண்டும் எனவும், தங்களுக்கென இருப்பது மகன் மட்டும்தான் என்றும் கண்ணீருடன் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு பலரையும் கலங்க வைத்தது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த 19 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருடைய இறப்பு விக்னேஷின் குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்தது. பலரும் பால் வியாபாரியான அவரின் தந்தை நினைத்து வேதனைப்பட்டார்கள். இதனிடையில் திமுகவை சார்ந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்
அவரிடம் வேதனையுடன் விக்னேஷின் தந்தை பேசிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் கவலையுடன் தைரியமாக இருக்குமாறு கூறியுள்ளார். முன்னதாக விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமயத்திலே, அன்பில் மகேஷ் நேரில் வந்து நலம் விசாரித்தார். மாணவரின் மருத்துவச் செலவை பற்றியெல்லாம் எதுவும் கவலைப்பட வேண்டாம். எந்த உதவியதாக இருந்தாலும், நான் பார்த்துக் கொள்கிறேன் என தைரியம் சொல்லியிருந்தார் அன்பில் மகேஷ்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விக்னேஷின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் அன்பில் மகேஷ். இதனிடையில் விஜய்யை பார்க்க வந்த விபத்தில் சிக்கிய விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உயிரிழந்த வரைக்கும் தவெகவை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் யாருமே வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு தவெக தலைவர் விஜய் சார்பில் இருந்து அஞ்சலி கூட தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.