செயல் வீரர்கள் கூட்டம்
இந்நிலையில் திருச்சியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளை விஜய் தேர்ந்தெடுத்தது குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில், “சென்னையில் எங்கு குடிசைகள், போதைபொருள், சாராயம் அதிகமாக இருக்கிறதோ பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதோ அங்கு போட்டியிட முடிவெடுத்து பெரம்பூர் தொகுதியில் நின்றார். திருச்சியை ஏன் தேர்வு செய்தார் என்றால், வளர்ச்சி என்பது சென்னையை நோக்கி மட்டுமே இருக்கக் கூடாது.
ஆதவ் அர்ஜுனா
அனைத்து இடங்களில் இருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மத்திய மாவட்டமான திருச்சியை தேர்ந்தெடுத்து விஜய் இங்கு நிற்கிறார் என தெரிவித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. அவருடைய இந்த பேச்சை தொடர்ந்து ஒருவேளை விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அதில் ஏதேனும் ஒன்றில் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது சென்னையில் இருப்பது தான் வசதி என்று பெரம்பூரை தக்க வைத்துக்கொண்டு திருச்சியில் ராஜினாமா செய்வாரா அல்லது பிற மாவட்டத்துக்கும் வளர்ச்சி இருக்க வேண்டுமென பெரம்பூரில் ராஜினாமா செய்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்
மேலும், அவர் எங்கு ராஜினாமா செய்தாலும் அங்கு திரும்பவும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதற்கு மக்களின் வரிப்பணம் தான் செலவு செய்யப்படும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனிடையில் பெரம்பூரில் முதல்நாள் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், திருச்சி கிழக்கில் வேட்புமனுத் தாக்கல் செய்த அன்று அங்கு பரப்புபுரை செய்தார். அதன்பின்னர் அந்த தொகுதிக்கு விஜய் வரவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதி
இது சம்பந்தமாக ஆதவ் அர்ஜுனா பேசும்போது, ஒருமுறை இந்த தொகுதிக்கு விஜய் வருகை தந்தார். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் காரணத்தால், அவரால் இங்கு மறுபடியும் வர முடியவில்லை. அவர் நாளை தேர்தலில் வென்ற பிறகு திருச்சி கிழக்கு அவருடைய சொந்த குழந்தை போன்று இருக்கும். விஜய் தனது குழந்தையை கைவிட மாட்டார். இதனை சொல்லி மக்களிடம் வாக்கு கேளுங்கள் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து ரத்தாகும் பரப்புரைகள்
இதனிடையில் நேற்றைய தினம் கன்னியாகுமரியில் பரப்புரை மேற்கொண்ட விஜய், இன்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பரப்புரை கூட்டத்தை அவர் ரத்து செய்து விட்டார். இப்படியாக விஜய் ஒருநாள் பரப்புரை, மறுநாள் ரத்து என செயல்பட்டு வருவது தவெகவினர் மத்தியிலே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு நாட்களாக காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என சொல்லிவிட்டு, தற்போது அனுமதி கிடைத்தும் பரப்புரையை ரத்து செய்யலாமா என்ற புலம்பி வருகின்றனர்.
தவெக வேட்பாளர்களின் ஐடியா
அதோடு பிற கட்சியை சார்ந்தவர்களும் தேர்தலுக்கு முன்பாகவே மக்களை சந்திக்காத விஜய், நாளை ஒருவேளை ஜெயித்து விட்டால் எப்படி தொகுதிக்கு வருவார். மக்கள் பிரச்சனைகளை கேட்டறிவார் என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதனிடையில் விஜய்யின் உருவப்படம், அவரது தோற்றத்தில் உள்ள நபர் மற்றும் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் விஜய் என தவெக வேட்பாளர்கள் மாற்று வழியில் பரப்புரை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
