நயினார் நாகேந்திரன்
இந்நிலையில் பாஜகவின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்டு வரும் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர் சந்தித்து பேசும்போது, திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதாக நினைப்பதாக கூறி பரப்பினை கிளப்பியுள்ளார்.
திமுகவை ஆட்சியில் அமர்த்துவதற்கு கட்சி துவக்கம்
காரைக்குடியில் ஜோசப் விஜய் சைக்கிளில் வந்தார். கையசைத்தார் என கேள்விப்பட்டேன். எல்லாரும் எம்ஜிஆர் ஆகிட முடியாது. ஏதோ திமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்காக தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய். அவர் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவனாக இருக்க வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்று இல்லாமல், திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டுமென விஜய் செயல்படுகிறார். சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வந்துள்ளாரா விஜய் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
விஜய்யை காப்பாற்றிய பவுன்சர்கள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், விஜய் திமுக ஜெயிப்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளதாக பேசியுள்ளார். முன்னதாக நேற்றைய தினம் காரைக்குடிக்கு பரப்புரை மேற்கொள்வதற்காக சென்ற விஜய், வழியில் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டினார். அப்போது அவர் தடுமாறி விழப்போன நிலையில், அவரை பவுன்சர்கள் பதறியடித்து பிடித்தனர்.
உரை நிகழ்த்தாமல் சென்ற விஜய்
இதனையடுத்து பரப்புரை நடக்கும் இடத்துக்கு சென்ற எதுவும் பேசாமல் கையை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். இது காலையில் இருந்து அவரின் பேச்சை கேட்பதற்காக வெயிலில் காத்திருந்த தவெகவினருக்கு கடுமையான ஏமாற்றமாக அமைந்தது. அதோடு தமிழ்நாடு அரசியல் களத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் போட்டிடும் காரைக்குடி தொகுதிக்கு விஜய் வருகிறார் என்ற போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
கடலூர் பரப்புரை ரத்து
அவர் அங்கு அனல் தெறிக்க பிரச்சாரம் மேற்கொள்வார் என தவெக தொண்டர்கள் நினைத்த நிலையில், விஜய் உரை எதுவும் நிகழ்த்தாமல் கிளம்பி சென்று விட்டார். தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொள்ள அனுமதித்த நேரம் கடந்து விட்ட காரணத்தால், அவர் எதுவும் பேசவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து இன்று கடலூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று காரைக்குடிக்கு சென்ற விஜய், இன்று கடலூர் பரப்புரையை ரத்து செய்தார்.
அடுத்தடுத்து ரத்தாகும் பிரச்சாரம்
தொடர்ந்து நாளை மறுநாள் கும்மிடிப்பூண்டியில் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையில் முன்னதாக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுக்கு வந்த பின் விஜய் தெரு தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்வார் என தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது அவர் தொடர்ச்சியாக தனது பரப்புரையை ரத்து செய்வதை இணையத்தில் பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
