விஜய் சொன்ன வார்த்தை.. தூத்துக்குடியை தேர்ந்தெடுத்தது ஏன்.. தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் பேச்சு – tvk candidate srinath spoke about the reason for choosing the thoothukudi constituency

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் விஜய்யின் நண்பராக ஸ்ரீநாத் பெயர் இடம்பெற்று இருந்தது. அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளார். விஜய்க்காக போஸ்டர் ஓட்டியவர்களே சீட் வழங்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்த நிலையில், விஜய்யின் நண்பருக்கு சீட் வழங்கப்பட்டது தவெகவினர் இடையிலே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கியுள்ளார் நடிகர் ஸ்ரீநாத்.

பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரிப்பு
விஜய்யின் வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்த ஸ்ரீநாத், தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேர்தல் சம்பந்தமான பணிகளை துவங்கியுள்ள அவர், பரப்புரையின் போது பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது சம்பந்தமான போட்டோக்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தூத்துக்குடியை தேர்ந்தெடுத்தற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் ஸ்ரீநாத்.

தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் பேச்சு
இது சம்பந்தமாக அவர் கூறும் போது, “தென் மாவட்டங்களுக்கு வரும்போது தூத்துக்குடிக்கு தனக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீநாத். மேலும், விஜய் ஸ்டைலில் நடிக்க வேண்டிய படங்களை எல்லாம் முடித்து விட்டு வந்து விட்டேன். இனிமேல் மக்களும், ஆண்டவனும் தான் முடிவை சொல்லுவாங்க என்றார். தொடர்ந்து தூத்துக்குடியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து பேசும்போது கழகமும், தலைவரும் முடிவு பண்ணியது தான். என்னுடைய ஆசை வேறாக இருந்தாலும், தலைவர் எடுத்த முடிவை பாலோ பண்ணுகிறேன்.

விஜய் சொன்ன அறிவுரை
என்னோட மண்ணில் போட்டி போடுவது இரட்டை மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். அதோடு விஜய் வெற்றியுடன் வா நண்பா என்று சொல்லி அனுப்பி வைத்ததாகவும் ஸ்ரீநாத் கூறியுள்ளார். அவர் உற்சாகத்துடன் பரப்புரையை துவங்கியுள்ள நிலையில், தூத்துக்குடியில் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது சில உள்ளூர் தவெகவினர் இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அஜிதா ஆக்னலுக்கு சீட் வழங்கப்படாதது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

பனையூரில் போராடிய அஜிதா ஆக்னல்
தமிழக வெற்றிக் கழகம் துவங்கியதில் இருந்தே அஜிதா ஆக்னல் தூத்துக்குடியில் களப்பணி ஆற்றி வந்தார். இதனையடுத்து கட்சி தனக்கு சார்பில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்று, பனையூருக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதோடு விஜய்யின் காரை அவர் வழிமறித்தது மிகுந்த பரபரப்பை கிளப்பியது. தொடந்து அவர் திமுகவின் தூண்டுதல் காரணமாக இவ்வாறு செய்வதாக தவெகவினர் விமர்சனம் செய்தனர்.

அதிருப்தி அடைந்த தவெகவினர்
சொந்த கட்சியினரே இவ்வாறு விமர்சித்த காரணத்தால், மன வேதனையில் தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் தவெகவின் பயணித்து வந்த நிலையில், தூத்துக்குடியில் அவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் நண்பரான ஸ்ரீநாத் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டது அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேட்புமனுத் தாக்கல்
இதனால் தங்களில் வீடுகளில் ஒட்டப்பட்டு இருந்த தவெக ஸ்டிக்கர்களை கிழிததும், கார்களில் கட்டியிருந்த கொடியை கழட்டி வீசியும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதனிடையில் இன்று ஸ்ரீநாததிடம் செய்தியாளர்கள் அஜிதா ஆக்னல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஸ்ரீநாத், அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். கழகத்திடம் தான் அதனைப்பற்றி கேட்க வேண்டுமென என சமாளித்து விட்டார். மேலும் வரும் நான்காம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link