கோவை,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய், மகளிருக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், கோவையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசியதாவது;-
“த.வெ.க. தலைவர் விஜய், சினிமாவில் பொங்கல் ஸ்பெஷல், தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்களை வெளியிடுவதுபோல், மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது வழக்கமான நடைமுறைதான்.
ஆனால் புதிதாக வந்திருக்கும் ஒரு அரசியல் கட்சி இந்த அளவிற்கு வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று மக்கள் சந்தேகப்படுவார்கள்.
மேலும், விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது. விஜய்யின் கட்சி தனியாக ஆட்சியைப் பிடித்து அரசை அமைப்பார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. அதே சமயம், அரசியல் கட்சிகள் எல்லாம் இன்று பெண்களுக்காக ஓடி ஓடி வாக்குறுதிகளை கொடுப்பதை நான் வரவேற்கிறேன்.
ஏனென்றால், ஒரு காலத்தில் பெண்கள் வெறும் வாக்காளர்களாக இருந்தனர். இன்று, பெண்கள் அரசு அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்பதை அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை பார்த்து புரிந்து கொள்ளலாம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
