விஜய் பரப்புரைக்கு திமுக தடை போடுகிறதா.. மக்களை ஏமாற்ற முடியாது.. திருமாவளவன் அதிரடி – vck thirumavalavan comments on tvk vijay campaign permission issue

சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரியளவில் பரப்புரையில் ஈடுபடாமல் இருப்பது அவரது கட்சி தொண்டர்களையே அப்செட் ஆக்கியுள்ளது. இதனிடையில் வேண்டுமென்றே திமுக, விஜய்யின் தேர்தல் பரப்புரைகளுக்கு அனுமதி மறுப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் இது சம்பந்தமாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பரப்புரை
நெல்லையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் போல் திமுகவை விமர்சித்த அவர், ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகு தான் கட்சியை துவங்கியுள்ளதாக பேசினார். இதனிடையில் தனது பரப்புரைக்கு திமுக வேண்டும்மென்றே அனுமதி மறுப்பதாக விஜய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவருடைய கட்சி நிர்வாகிகளும் இதே கருத்தை தொடர்ந்து ஊடகங்களில் பேசி கொண்டிருக்கின்றனர்.

திருமாவளவன் கருத்து
இந்நிலையில் இது சம்பந்தமாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி அவர் கூறியுள்ளதாவது, தற்போது பரப்புரைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டு அதிகாரிகள் இருந்தாலும், அவர்களை தேர்தல் ஆணையம் தான் வழிநடத்துகிறது. எனவே விஜய் அவர்களுக்கு பரப்புரை செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கிறது என்றால் அதற்கு திமுக காரணம் கிடையாது. அமைச்சர்களோ, பொறுப்பாளர்களோ காரணமாக இருக்க முடியாது.

தவெக விஜய்
வேண்டுமென்றே அதனை திமுகவுக்கு எதிராக திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் தெரியாதவர்கள் கிடையாது. மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் திருமாவளவன் எம்பி. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார்.

திமுக மீது குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் தவெக சார்பாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு உரிய அனுமதி வழங்கப்பட வேண்டும். திமுக அரசுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுகிறார்கள். திட்டமிட்டே அவர்கள் தான் பிரச்சாரத்துக்கு இடையூறு செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விஜய் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் தவெகவின் இந்த குற்றச்சாட்டினை திமுகவை சார்ந்த நிர்வாகிகள் மறுத்தனர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் மூலமாக தான் பரப்புரைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தனர். அதோடு மற்ற கட்சிகள் அனைத்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும்போது, தவெக காரணம் சொல்லி பரப்புரை மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் சோஷியல் மீடியாவில் சிலர் பதிவுகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் திருமாவளவன், விஜய் பரப்புரை அனுமதி மறுப்புக்கு திமுக காரணமில்லை என பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

தியேட்டரில் தான் விசில் அடிப்பார்கள்
இதனிடையில் நேற்றைய தினம் கடலூரில் நடந்த பரப்புரையில் தவெக விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார் விசிக திருமாவளவன். விசில் அடிப்பவர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டாம். வீட்டுக்கு அனுப்புங்கள். சட்டசபையில் விசில் அடிக்க மாட்டார்கள். தியேட்டரில் தான் விசில் அடிப்பார்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தும் விஜய்யுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை என விஜய்யை விமர்சித்து திருமாவளவன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link