விஜய் பரப்புரை அடுத்தடுத்து திடீர் ரத்து ஏன்? பின்னணி என்ன?

5 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ உள்ளிட்ட வாகன பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.

நேரக்கட்டுப்பாடு என்ற பெயரில் காவல்துறையை வைத்து திமுக தரும் மறைமுகக் கெடுபிடியால்தான், தங்களது தலைவரால் பரப்புரை செய்ய முடியவில்லை என்று தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பிபிசியிடம் தெரிவித்தார்.

காவல்துறையின் தலைவரையே தேர்தல் ஆணையம் மாற்றிவிட்ட நிலையில், இதில் ஆளும்கட்சி தலையிட வாய்ப்பில்லை என்றும், பரப்புரை ரத்து என்ற முடிவை விஜய் எடுப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் என்றும் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்தார்.

விஜய்க்கு கூட்டம் அதிகம் வருவதால் குறுகிய காலத்துக்குள் அதிகமான காவல்துறையினரை பாதுகாப்புக்கு நிறுத்துவது கஷ்டம் என்பதால்தான் காவல்துறை இந்த கட்டுப்பாட்டை விதிப்பதாக முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி கூறினார்.

இதனால் இரு வாரங்களில் விஜய் பரப்புரை எப்படி நடக்குமென்பது கேள்விக்குறியாகியுள்ளது.

படக்குறிப்பு, பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய்

‘பரப்புரைக்கு 2 மணி நேரம் மட்டுமே அனுமதி’

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 21 அன்று மாலை வரை மட்டுமே பரப்புரை செய்ய முடியும்.

இதனால் பரப்புரை செய்வதற்கு இன்னும் 2 வாரங்களுக்கும் குறைவான நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கிறது.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் 2 நகரங்களில் காலையும் மாலையும் என 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசிவருகிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாளொன்றுக்கு பல தொகுதிகள் என்ற கணக்கில் வாகன பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாகன பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் தவெக தலைவர் விஜய், தேர்தல் அறிவிப்புக்கு பின் பெரம்பூரில் மார்ச் 30 அன்று பரப்புரையில் ஈடுபட்டார். அதன்பிறகு திருச்சியிலும் புதுச்சேரிலும் ஒரு நாள் பரப்புரை செய்த விஜய், சென்னையில் அடுத்தடுத்த நாட்களில் மேற்கொள்ள இருந்த பரப்புரையை ரத்து செய்தார்.

சென்னையில் வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. அந்த விண்ணப்பத்தின்படி சென்னை மாநகர காவல்துறை அனுமதியளித்தது.

ஆனால் வில்லிவாக்கத்தில் பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும், தியாகராய நகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 வரையிலும் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி வழங்கியதாகக் கூறப்பட்டது. நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன், வேறு சில நிபந்தனைகளையும் சென்னை மாநகர காவல்துறை விதித்ததாக தவெக சார்பில் சொல்லப்பட்டது.

இதுபற்றி ஏப்ரல் 6 அன்று செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ”வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய நண்பகல் 12 – 1 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுத்தார்கள். ஆனால், வில்லிவாக்கத்தில் பரப்புரையை முடித்துவிட்டு அண்ணாநகர் வழியாக செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தனிப்பட்ட முறையில் அண்ணா நகரிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.” என்று கூறினார்.

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

”ஒரு கட்சியின் தலைவர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். மாநகர காவல் ஆணையர் அதைப் பின்பற்றவில்லை. தியாகராய நகரில் 2 மணி – 6 மணி என்று கொடுக்கப்பட்ட அனுமதி, ஒரு மணி நேரத்தில் 2 மணி – 3 மணி என மாற்றப்படுகிறது.” என்றும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியிருந்தார்.

இதனால் சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்ற வேண்டுமென்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைப்பதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்.

இந்த காரணங்களால் ஏப்ரல் 6 அன்று விஜய்யின் வில்லிவாக்கம் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 7 செவ்வாய்க்கிழமையன்று சென்னை சைதாப்பேட்டையில் நடக்கவிருந்த விஜய் பரப்புரை நிகழ்ச்சியும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்ததாக புதுச்சேரியில் வாக்குப்பதிவை காரணம் காட்டி கடலூரில் ஏப்ரல் 9 அன்று நடக்கவிருந்த பரப்புரையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது

இந்த 3 இடங்களிலும் காவல்துறை அனுமதியளித்திருந்தும், தவெக சார்பிலேயே பரப்புரை ரத்து என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரை செய்ய இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், விஜய்யின் 3 நாள் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பது, அக்கட்சியின் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 2 நாட்கள் பரப்புரையை ரத்து செய்த பின்பு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் விஜய் ஏப்ரல் 8 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில், மீதமுள்ள 12 நாட்களில் விஜய் எங்கெங்கே நேரடியாக பரப்புரை மேற்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் பரப்புரை 3 நாட்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல்துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் ஆகும்.” என்று கூறியிருந்தார்.

படக்குறிப்பு, பெரம்பூரில் விஜய் பரப்புரைக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி பணியாளர்கள்

விஜய் கூறியது என்ன?

நிகழ்ச்சிக்கு 2 நாள்கள் முன்பே பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பரப்புரைக்கு தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி சார்பில் அங்கு பள்ளம் தோண்டப்பட்டு இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டிய விஜய், இந்த திடீர் பள்ளங்களும், தடுப்புகளும் எங்கிருந்து வந்தன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அங்கே 3 ஆயிரம் பேர் கூடமுடியாது என்று கூறி அந்த இடம் பரப்புரைக்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறியிருந்த விஜய், தவெக சார்பில், ”நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகவுள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் குற்றச்சாட்டின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், காவல்துறையின் கெடுபிடியின் பின்னணியில் இருப்பது திமுகதான் என்று கூறினார்.

சென்னை மாநகர காவல்துறையில் திமுக அரசு நியமித்த அதிகாரிகள் இருப்பதால், அவர்களை வைத்து மறைமுகமாக இத்தகைய இடையூறுகளைத் தருகின்றனர் என்றார்.

”விஜய்யின் அரசியல் பிரவேசம், அவருக்கு தமிழக மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு எல்லாவற்றிலும் அதிகம் அடிபடுவது திமுகதான். விஜய் பெயரைச் சொல்லவே திமுக தலைவர்கள் நடுங்குகின்றனர். விஜய் செல்லுமிடமெல்லாம் அளவு கடந்த கூட்டம் வருகிறது. வேறு எந்தக் கட்சித் தலைவருக்கும் இவ்வளவு கூட்டம் வருவதில்லை. அதன் வெளிப்பாடுதான் இத்தகைய இடையூறுகள்.” என்றார் நாஞ்சில் சம்பத்.

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் பிரியன்

ஆனால் தமிழக காவல்துறை டிஜிபியையே தேர்தல் ஆணையம் மாற்றிவிட்ட நிலையில், இப்போதும் காவல்துறையின் நடவடிக்கைகளின் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறுவது மிகவும் அபத்தமாக இருப்பதாகத் தெரிவித்தார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

விஜய் விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் செய்தது தவறு என்றால் தேர்தல் ஆணையம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

”விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று நினைத்தால் அவர் அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் வந்திருக்கிறார் என்பதை அவருடைய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் திமுக மீது பழி சுமத்துவதன் ஒரே நோக்கம், திமுகவிற்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளைக் கூர்மைப்படுத்தி, அதிமுகவுக்குப் போகும் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமென்பதுதான்.” என்றார் பத்திரிக்கையாளர் ப்ரியன்.

”துருவ அரசியலில் அதிமுக இருக்குமிடத்தை விட்டு நகர்த்திவிட்டு திமுகவிற்கு நாங்கள் மட்டும்தான் எதிரி என்று கட்டமைக்கும் முயற்சிதான் இது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர்களும் இந்த நேரக்கட்டுப்பாட்டை மதித்தார்கள். இப்போது விஜய் பரப்புரை ரத்து செய்யப்பட்டதற்கு நேரக்கட்டுப்பாடு மட்டுமே காரணமாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்.” என்றார் ப்ரியன்.

‘ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள்தான் விதிக்கப்படும்’

”தவெக குற்றச்சாட்டுகளை தமிழக காவல்துறை தரப்பில் யாரும் மறுக்கவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் காவல்துறை விதிக்கும் நேரக்கட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதுதான்” என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

அப்படி ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு மாதிரியாக காவல்துறை அனுமதி தர வாய்ப்பியில்லை என்கிறார் அவர்.

இதுபற்றி விளக்கிய ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலே, காவல்துறை உள்ளிட்ட எல்லாத்துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். அப்படியிருக்கும்போது எந்தவொரு காவல்துறை அதிகாரியாலும் ஒரு தலைவருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. விஜய் கூட்டத்துக்கு பாதுகாப்பு கொடுப்பதில் ஏராளமான நடைமுறைச்சிக்கல் இருக்கிறது.” என்றார்

விஜய் பரப்புரையைப் பார்க்க வரும் கூட்டம், ஒரே நேரத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகரும்போது, அத்தனை பேருக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல்துறையில் ஆள்பலமில்லை என்று கூறும் கருணாநிதி, கரூர் போல ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால் காவல்துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்கிறார்.

சென்னை போன்ற நகரங்களில் விஜய்க்கு வரும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு இடத்தையும் பார்த்தே அனுமதி தரமுடியுமென்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி, ” நேரக்கட்டுப்பாடு என்பது எப்போதும் இருப்பதுதான். கரூர் சம்பவம் காரணமாக விஜய்க்கு வரும் கூட்டத்தை முன்னிட்டு இப்படி நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கலாம்.” என்றார்.

நேரக்கட்டுப்பாட்டை விஜய் கடைப்பிடிக்க முடியாததால்தான், அவருடைய பரப்புரைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்த கருத்தை மறுத்த நாஞ்சில் சம்பத், ”இங்கே நேரக்கட்டுப்பாடு பிரச்னையில்லை. ஆனால் காவல்துறை எப்படி பாதுகாப்பு கொடுக்கிறது என்பதுதான் கேள்வி. ஏனெனில் எங்கள் மீது மீண்டும் பழி விழ வேண்டுமென்று காத்திருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து அதன்படி முடிவெடுக்க வேண்டியுள்ளது.” என்றார்.

”முதலில் இருந்தே திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான் போட்டி என்று விஜய் கூறிவருகிறார். ஆரம்பத்தில் இதைக் கிண்டலடித்த அரசியல் விமர்சகர்களும் கூட, இப்போது இதுதான் கள யதார்த்தம் என்பதை ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர். அதனால்தான் எங்கள் தலைவரை களத்துக்கு வரவிடாமல் இப்படி தடுக்கும் முயற்சி நடக்கிறது. இப்போது பரப்புரை செய்ய ஆயிரம் வழி இருக்கிறது. இது டிஜிட்டல் யுகம். அதனால் நாங்கள் மக்களிடம் சுலமாக ரீச் ஆகிவிடுவோம்.” என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் டிஜிட்டல் பரப்புரையில் மட்டுமே விஜய் பேசப்போகிறாரா?

தேர்தல் பரப்புரை முடிவு பெறுவதற்கு 12 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜய் நேரடியாக பரப்புரை வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால், சில வேட்பாளர்கள், விஜயை போல தோற்றம் உள்ளவர்களை வைத்து பரப்புரை செய்யவும் துவங்கியுள்ளனர்.

தொலைக்காட்சியில் விஜய் அளித்துள்ள விரிவான பேட்டியை மக்களிடம் ஒளி பரப்ப ஏற்பாடு நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவுமில்லை. மறுக்கவுமில்லை.

நாஞ்சில் சம்பத் கூறிய பதில், விஜய் நேரடியாக பரப்புரை செய்வதை விட டிஜிட்டல் முறையில் பரப்புரை செய்வார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

”விஜய் பரப்புரைக்குப் போகாவிட்டாலும் அவருக்குக் கிடைக்கிற வாக்குகள் கண்டிப்பாகக் கிடைக்கும். விஜய் பரப்புரையைக் கேட்க வருவதை விட அவரைப் பார்க்கவே அளவு கடந்த கூட்டம் வருகிறது. அந்த கூட்டமெல்லாம் கூடுதல் வாக்குகளாக மாறுமா என்பது பெரும் சந்தேகம். தவெகவுக்கு வரும் வாக்குகள், திமுக. அதிமுக, நாம் தமிழர் என எல்லாக் கட்சி வாக்குவங்கியையும் பாதிக்கும். ஆனால் எந்த கட்சியின் வாக்குவங்கியை அதிகம் பாதிக்கும் என்பதில்தான் முக்கியக் கூட்டணிகளின் வெற்றி தோல்வி அமையும்” என்றார் மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன்.

படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.

இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, கரூர் சம்பவம், ஜனநாயகன் படவிவகாரம், தற்போது பரப்புரைக்கான நேரக்கட்டுப்பாடு போன்றவற்றுக்கு திமுகவை விஜய் குற்றம்சாட்டுவதை, திமுகவினர் சமூக ஊடகங்களில் மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும், தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் நிலையிலும் இப்போதும் பாஜகவை விமர்சிக்காமல் திமுகவை விமர்சிப்பதாக பலரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ”ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசிப்படம் என்றதும் பராசக்தி படத்தை எடுத்து வெளியிட்டனர். அந்த படம் வெளியாக அனுமதித்த சென்சார் போர்டு, ஜனநாயகனை தடுத்துவிட்டது. இந்த பரமபத விளையாட்டில் முக்கிய கதாபாத்திரத்தில் திமுக இருக்கிறது. துணை கதாபாத்திரத்தில் பாஜக இருக்கிறது.” என்றார்.

”இப்போது தேர்தல் யுத்தம் நடப்பது தமிழகத்தில். இங்கே அதிகாரத்தில் இருக்கும் பிரதான எதிரி திமுக மட்டும்தான். திமுக ஆட்சியை அகற்றுவதுதான் இந்த யுத்தத்தின் வெற்றி. பாஜக இங்கே ஒரு பொருட்டே இல்லை. ஆனால் பாஜகதான் எப்போதுமே எங்கள் கொள்கை எதிரி என்பதில் மாற்றமில்லை. அந்த கொள்கை எதிரியின் மீது கூர்மையான விமர்சனங்களை வைக்கும் தேவை இப்போது இல்லை.” என்றார் நாஞ்சில் சம்பத்.

Source link