விஜய் பிரசாரம் ரத்து: காவல் அதிகாரிகள் மீது ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

சென்னையில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்வதாக இருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதியில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

விஜய் பிரசாரத்திற்கு நேற்று இரவு போலீசார் அனுமதி வழங்கினர். இதில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பிரசாரம் செய்து முடிக்கவும், தியாகராயநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரசாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பிரசாரம் செய்து முடிக்க போதுமானதாக இருக்காது என்பதால் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டால் தான் தேர்தல் ஜனநாயகமாக நடக்கும். தி.நகரில் எங்கள் தலைவர் விஜய் 2 மணி முதல் 6 மணி வரை பிரச்சாரம் செய்ய முதலில் அனுமதி அளித்தனர் . சில மணி நேரங்களிலேயே 1 மணி நேரம் தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

விஜய் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடு காவல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் உள்ளார் . சென்னையில் விஜய் பிரசாரம் செய்ய முடியாத அளவிற்கு திமுக அழுத்தம் கொடுக்கிறது. டெல்லியிலும் போய் முறையிட உள்ளோம்” என்றார்.

Source link