மும்பை,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் அமெரிக்க அணி விளையாடின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் அமெரிக்கா அணியின் சிறப்பான பந்த்துவீச்சால் இஷான் கிஷான் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் , ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
பின்னர் ரிங்கு சிங் , ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . மறுபுறம் சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதமடித்து அசத்தினார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 84 ரன்கள் எடுத்தார். அமெரிக்கா அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சூர்யகுமாருக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் டி20 போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் நேற்று முறியடித்தார். இவர் மொத்தம் 17 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 16 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
