வில்லிவாக்கத்தில் த.வெ.க. தேர்தல் பணிமனையை அகற்ற உத்தரவு

செங்குன்றம்,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட தீவிரம் காட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. முதல் கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் த.வெ.க., வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள். இந்த பட்டியலில் 30-க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்களும் இடம் பெற இருக்கிறார்கள். இதற்கான நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார்.

நாளை (சனிக்கிழமை) பெரம்பூர் தொகுதியில் இருந்து விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி. நக ரில் விஜய் காலை 11 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன்படி பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக விரிவான பயண திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் இன்றி பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முறையாக தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அனுமதி கோரியுள்ளது. போலீஸ் தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 தொகுதிகளில் பிரசாரம் நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், சில பகுதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சென்னை வில்லிவாக்கம் பெருமாள் கோவில் அருகே த.வெ.க. சார்பில் தேர்தல் பணிமனை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இடம், வில்லிவாக்கம் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் நிர்வாக குழு சார்பாக தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் தேர்தல் அதிகாரிகள், த.வெ.க. தேர்தல் பணிமனையை நாளைக்குள்(அதாவது இன்று) அகற்ற உத்தரவிட்டனர்.

Source link