வேலூர்,
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வருகிறார். அந்தவகையில், த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வருகிற 23-ந் தேதி வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம் சேரியில் நடக்கிறது.
இதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பந்தக்கால் நடப்பட்டது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மைதானத்தில் உள்ள செடிகளை அகற்றி பாதுகாப்புக்காக மைதானத்தை சுற்றி சுமார் 10 அடி உயரத்தில் தகர சீட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேலூர், அகரம்சேரியில் நடைபெறவுள்ள விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கியூஆர் கோடு பாஸ் வைத்திருக்கும் 4,900 தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் பங்கேற்பதை தவிர்க்க தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
