டோக்கியோ
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி படுகொலை செய்யப்பட்டார். இதேபோன்று, ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பசிஜ் துணை ராணுவத்திற்கு தலைமையேற்று, மூத்த ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் குலாம்ரெசா சுலைமானி.
இவர், கூடாரத்தில் தங்கியிருந்தபோது, தாக்கி கொல்லப்பட்டதுடன், அவருடைய துணை தளபதியான சையது கரிஷியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் பல்வேறு நாட்டு குடிமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
உலகின் மிக முக்கிய கடல்வழி பகுதியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது பல நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதனால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஜலசந்திக்கு தொலைவிலேயே நிற்கின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் சரக்குகளை பெற முடியாமல் தவித்து வருகின்றன.
இதனை முன்னிட்டு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஜப்பானும் சேர்ந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்துள்ளன.
அந்த ஹார்மூஸ் ஜலசந்தி வழியே பாதுகாப்பான முறையில் கப்பல்கள் பயணம் செய்யும் என்பது உறுதி செய்யப்படுவதற்கான முறையான முயற்சிகளுக்காக பங்காற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
