ஹார்மூஸ் நீரிணை: இன்று இரவு 7.30 மணிக்கு சுற்றி வளைக்கும் அமெரிக்கா- ட்ரம்ப் முடிவால் ஏற்படும் பாதிப்புகள்! – us military block all iranian ports from 7.30pm after trump strait of hormuz

போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அடுத்தகட்ட அதிரடிக்கு தயாராகிவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதுவும் இன்று இரவு முதல் ஹார்மூஸ் நீரிணை வழியாக எந்த கப்பல்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று தடாலடியாக கூறியிருக்கிறார்.

ஏப்ரல் 13, 2026 எத்தனை நாடுகளுக்கு தூங்கா இரவாக மாறப் போகிறது எனத் தெரியவில்லை. ஏனெனில் ஹார்மூஸ் நீரிணையை இரவு 7.30 மணிக்கு முழுவதுமாக ராணுவத்தை கொண்டு சுற்றி வளைக்கப் போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஈரான் அரசுக்கு சுங்கவரி செலுத்தி விட்டு நீரிணை வழியாக பயணிக்கும் எந்தவொரு கப்பலையும் அனுமதிக்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

மூடப்படும் ஹார்மூஸ் நீரிணையால் அச்சம்

தற்போது ஹார்மூஸ் நீரிணை வழியாக வெளியேறுவதற்கு சுமார் 4,200 கப்பல்கள் காத்திருக்கின்றன. இவை ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றை சுமந்து கொண்டு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இவை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு போய் சேராவிட்டால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதில் இந்தியாவும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. கேஸ், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் எனப் பலவும் தட்டுப்பாடாக மாறி, ஒவ்வொரு வீட்டிலும் பாதிப்பை பார்க்க நேரிடும்.

Russia-Ukraine போர்:காரணங்கள் மற்றும் முக்கிய விவரங்கள்

டொனால்ட் ட்ரம்ப் ஏன் இந்த முடிவை எடுத்துள்ளார்?

கடந்த 45 நாட்களாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இடையில் தற்காலிக போர் நிறுத்தம் என்று அறிவித்தாலும், லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம் என்று கூறிஇஸ்ரேல் அதிரடியாக தாக்கி வருகிறது. எனவே முழுமையான அமைதி நிலை என்று கூறிவிட முடியாது.

பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதான பேச்சு

இதற்கிடையில் ஈரான் – அமெரிக்கா இடையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம் என்று பாகிஸ்தான் களமிறங்கியது. 1979ல் இஸ்லாமிய புரட்சி நடந்ததை அடுத்து வாஷிங்டன் – டெஹ்ரான் இடையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால் அது தற்போது தான். இதையொட்டி இரு நாட்டு உயர் அதிகாரிகளும் இஸ்லாமாபாத் சென்றனர். சர்வதேச அரங்கில் இரண்டு முக்கிய நாடுகளை சமாதான உடன்படிக்கைக்குள் கொண்டு வருவது சாதாரண காரியமல்ல.

ஆனால் அந்த அக்னி பரீட்சையை பாகிஸ்தான் கையில் எடுத்தது. ஒருவேளை இதனை சாத்தியப்படுத்தினால் இஸ்லாமிய உலகில் தங்களின் நிலை மேம்படும். ஆசிய அளவில் அதிகாரம் பெற்ற நாடாக அடியெடுத்து வைக்கும். இதுபோன்ற அரசியல் கணக்குகளை மத்தியில் பாகிஸ்தான் ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக தான், அடுத்தகட்ட நடவடிக்கையில் ட்ரம்ப் இறங்கியுள்ளார்.

ஹார்மூஸ் நீரிணையை முடக்கும் நடவடிக்கை – என்ன நடக்கும்?
வ.எண் நிகழப் போகும் சங்கிலித் தொடர் பாதிப்புகள்
1 ஏற்கனவே பிரண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 120 டாலரை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ட்ரம்ப் நடவடிக்கையால் விலை மேலும் உயரக்கூடும். 150 டாலரை நோக்கி எகிறலாம்.
2 ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.
3 குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் தங்களுக்கான எரிபொருள் தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும்.
4 வளைகுடா நாடுகள் 80 சதவீத உணவு இறக்குமதியை ஹார்மூஸ் நீரிணை வழியாக தான் மேற்கொள்கின்றன. எனவே எரிபொருள் ஏற்றுமதி மட்டுமின்றி உணவுப் பொருள் இறக்குமதியும் சிக்கலாகிவிடும்.
5 ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டால் சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாக சுற்றி செல்ல வேண்டும். அதற்கு 10 முதல் 15 நாட்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளும். இது செலவுகளை அதிகரிக்கும். கடைசியில் சாமானியர்கள் தலையில் விலைவாசி உயர்வாக வந்து விழும்.