1 ரன்னில் தோல்வி.. மில்லரை கடுமையாக சாடிய அஷ்வின்

சென்னை,

குஜராத் அணிக்கு எதிராக நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 1 ரன்னில் தோல்வியை தழுவியது. 2 பந்துகளில் 2 ரன் எடுக்க வேண்டிய சூழலில், கடைசி ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு கிடைத்தும், மில்லர் ஓட மறுத்துவிட்டார். கடைசி பந்து நேரடியாக விக்கெட் கீப்பரிடம் சென்றதால், ரன் ஓட முயன்று, குல்தீப் யாதவ் அவுட்டானார். மில்லர் ரன் ஓட மறுத்தது தவறான முடிவு என பல கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி அணி வெற்றியை குஜராத்துக்கு தாரை வார்த்து 2 புள்ளியை விட்டுக்கொடுத்து விட்டதாக அஸ்வின் தெரி வித்துள்ளார். டெல்லி- குஜராத் ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் யூடியுப் சேனலில் பேசுகையில்;

”டெல்லி அணி வெற்றியை குஜராத்துக்கு தாரை வார்த்து 2 புள்ளியை விட்டுக்கொடுத்து விட்டது என்றே சொல்வேன். 2 பந்தில் 2 ரன் தேவைப் பட்ட போது, குல்தீப் யாதவின் இடத்தில் நான் இருந்திருந்தால் 5-வது பந்தில் எப்படியாவது ஒரு ரன்னுக்கு டேவிட் மில்லரை ஓட வைத்திருப்பேன். மில்லர் ஏன் ஓடவில்லை என்பது தெரியவில்லை. சில நேரம் மூளைமழுங்கி இப்படித்தான் முட்டாள்தனமாக செய்து விடுவார்கள்.

கடைசி பந்தில் சிக்சர் அல்லது பவுண்டரி தேவை என்றால் மில்லர் செய்ததை சரி என்று சொல்லலாம். 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தால் அதன் பிறகு என்ன நடந்திருக்கும்? கடைசி பந்தில் குல்தீப் யாதவ் ஆட்டமிழந்தாலும் கூட பிரச்சினை இல்லையே? ஸ்கோர் சமநிலையை எட்டி ஆட்டம் சூப்பர் ஓவருக்கு நகர்ந்திருக்கும். டெல்லி அணி நன்றாகத் தானே இருக்கிறது. சூப்பர் ஓவருக்கு சென்றிருக்கலாமா? இப்படியான தோல்விகளை சந்தித்தால் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று உங்களது நம்பிக்கை சிதையும். அடுத்து குஜராத் போன்ற அணிகளை மீண்டும் தொடருக்குள் நுழைய அனுமதிப்பது போல் ஆகி விடும். இந்த போட்டியில் குஜராத் தோற்றிருந்தால் அவர்கள் சிக்கலான சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Source link