100 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை – தெலுங்கானாவில் அதிர்ச்சி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கிஷ்தாபூர் கிராமத்தில், சுமார் 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கவுதம் என்பவர் கூறுகையில், இந்த 100 தெருநாய்களும் மார்ச் 7 மற்றும் 8-ந்தேதிகளில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக கிராம பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் ஆகியோர், நாய்களை கொலை செய்வதற்காக 2 நபர்களுக்கு பணத்தை கொடுத்ததாகவும், நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்துவிட்டு, அவற்றை ஆற்றங்கரை ஓரமாக புதைத்துவிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிராம பஞ்சாயத்து தேர்தலின்போது, தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக சம்பந்தப்பட்ட நபர்கள் வாக்குறுதி அளித்ததாகவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானாவில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் அதிக அளவில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டும் தெலுங்கானாவில் சுமார் 1,300 தெருநாய்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link