வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக, தங்களின் வேட்பாளர்களை இறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
என்.டி.ஏவில் தொகுதி பங்கீடு
நேற்றைய தினம் பாஜக, பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில், அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மும்முரம் காட்டி வருகிறார். இதற்கிடையில் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதில்,
| வ.எண் | தொகுதி | வேட்பாளர் பெயர் |
| 1 | பெரியகுளம் | டாக்டர் கே.கதிர்காமு |
| 2 | மன்னார்குடி | எஸ்.காமராஜ் |
| 3 | திருவையாறு | வி.கார்த்திகேயன் |
| 4 | காரைக்குடி | தெர்போகி பண்டியன் |
| 5 | திருப்பத்தூர் | என்.சி. பார்த்தி/ கானா சேகர் |
| 6 | நாங்குநேரி | எஸ்.பரமசிவ ஐயப்பன் |
| 7 | ஒட்டப்பிடாரம் | ஆர்.சுந்தர்ராஜ் |
| 8 | திருச்சி மேற்கு | செல்வராஜ் |
| 9 | சைதாப்பேட்டை | செந்தமிழன் |
| 10 | பூந்தமல்லி | டி.ஏ.ஏழுமலை |
| 11 | மடத்துக்குளம் | சி.சண்முகவேலு |
மன்னார்குடியில் கடும் போட்டி
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தனி தொகுதியாகும். இங்கு திமுகவை சேர்ந்த எஸ்.சரவணகுமார் சிட்டிங் எம்.எல்.ஏ. இங்கு கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட கதிர்காமு 3வது இடத்தை பிடித்தார். ஆனால் அப்போது அதிமுக தனி அணியாக நின்றது. இம்முறை அதிமுக – அமமுக கூட்டணியால் திமுகவிற்கு டஃப் கொடுக்க முடியும் என்கின்றனர். மன்னார்குடி திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தொகுதி. தொடர்ந்து 3 முறை இவர் வெற்றி பெற்று செல்வாக்கு மிகுந்த நபராக திகழ்கிறார். கடந்த தேர்தலில் தான் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை அதிமுக, அமமுக வாக்குகள் ஒன்று சேர்வதால் கிட்டதட்ட நெருங்கி வரக்கூடும்.
அதிமுக டூ திமுக-தொடரும் பட்டியல்!
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் தவெக சார்பில் பிரபு தீவிரமாக வேலை செய்து வருகிறார். எனவே வாக்குகள் பெரிதாக பிரியும். இதில் அமமுகவின் வெற்றி சவாலாக இருக்கும் என்கின்றனர். திருப்பத்தூர் தொகுதி அமைச்சர் பெரியகருப்பன் வசமுள்ளது. அதுவும் தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ. இங்கு வெற்றி வாய்ப்பு சற்று கடினம் எனக் கூறப்படுகிறது.
கே.என்.நேருவிற்கு எதிராக அமமுக வேட்பாளர்
நாங்குநேரி காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் வசம் இருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுக, அமமுக வாக்குகளை ஒன்று சேர்த்தால் காங்கிரஸை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இரு கட்சிகளிடமும் நிலவுகிறது. ஆனால் விஜய் பிரிக்கும் வாக்குகளால் முடிவுகள் மாறவும் வாய்ப்புள்ளது. திருச்சி மேற்கு தொகுதியானது திமுக அமைச்சர் கே.என்.நேரு வசமுள்ளது. தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ. கடந்த முறை 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிமுகவை திணறடித்தார். எனவே இம்முறை வாக்குகள் எவ்வளவு பிரித்தாலும் அமமுகவிற்கு களம் கடினமாக தான் இருக்கும் என்கின்றனர்.
சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிட்டிங் எம்.எல்.ஏ. எனவே போட்டி மிக கடுமையாக இருக்கும். பூந்தமல்லியிலும் இதே நிலை தான். மடத்துக்குளம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ அதிமுகவின் சி.மகேந்திரன். இது அமமுகவிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.
