மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து, பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் தீவிர பிரசார இயக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு சந்திப்பில் இந்தப் பிரசார இயக்கம் தொடங்கியது. தொழிலாளர் முன்னேற்ற பேரவை (LPF) மாவட்ட செயலாளர் சுசி ரவீந்திரன் பிரச்சாரத்தைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திரேஷ்புரம் மற்றும் ஒன்றாம் கேட் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் ஆதரவு திரட்டப்பட்டது.
இந்தப் பிரசாரத்தில் பல்வேறு தொழிற்சங்க மற்றும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள் எல்பிஎஃப் முருகன், கருப்பசாமி, சிஐடியு பேச்சிமுத்து, ரசல், அப்பாதுரை, சிவபெருமாள், காசி, சங்கரன், ரவிதாக்கூர், ஏஐடியுசி பாலசிங்கம், சுப்ரமணியன், ஐஎன்டியுசி ராஜகோபாலன், பால்ராஜ், ஸ்டீபன், ஏஐசிசிடியூ சகாயம், மின்னல் அம்சத், சிவராமன், ஐக்கிய விவசாய முன்னணி ரவீந்திரன், புவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை சிதம்பரநகரில் நடைபெறும் பிரசார இயக்கத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும், ஐக்கிய விவசாய முன்னணியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். நாளை காலை 8 மணிக்கு புதுக்கோட்டையில் தொடங்கும் பிரசாரப் பயணம், புதுக்கோட்டை, சாயர்புரம், திருவைகுண்டம், பேய்குளம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சியில் நிறைவு பெறுகிறது.
மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் அனைவரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக பிப்ரவரி 12 அன்று வணிகர்கள் அனைவரும் கடையடைப்பு செய்து இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
