மத்தியபிரதேசம்,
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் பேசிக்கொண்டனர். மேலும், தங்களை பற்றிய தனிப்பட்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர். முதலில் நட்பாக ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினர் இதுபற்றி அறிந்ததும், அவருக்கு உடனடியாக வேறு இடத்தில் திருமணம் செய்துவைக்க முயற்சி மேற்கொண்டனர். இதனால், சுதாரித்துக்கொண்ட இளம்பெண் தனது காதலனான சிறுவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் வெளியேறி மும்பைக்கு சென்றார். அங்கு காதலனை வரவழைத்து அங்கிருந்து, இருவரும் சூரத் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். இதற்கிடையே சிறுவனின் பெற்றோர், அவன் காணாமல் போனதாக ராஜ்கோர்ட் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில், சூரத் ரெயில் நிலையத்தில் உள்ள பொது காத்திருப்பு அறையில் ஒரு இளம்பெண்ணும், சிறுவனும் பதற்றமாக அமர்ந்திருப்பதை ரெயில்வே போலீசார் கவனித்தனர். உடனே, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுவன் காணாமல் போன தகவலும் அவர்களுக்கு கிடைத்ததால், உடனடியாக ராஜ்கோர்ட் போலீசாரை தொடர்புகொண்டு விவரங்களை தெரிவித்தனர்.
ராஜ்கோர்ட் போலீசாரும் இருவரையும் வந்து அழைத்து சென்றனர். சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், இளம்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
