பணி நீக்கம் எதிர்ப்பு தெரிவித்து சக ஊழியர்கள் போராட்டம் :
மயிலாடுதுறை அரசினர் பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 70 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே இருந்த ஒப்பந்த நிறுவனம் மாற்றப்பட்டு, புதிய ஒப்பந்த நிறுவனம் இன்றுமுதல் பொறுப்பேற்றுள்ளது.
புதிதாக ஒப்பந்தம் பெற்றுள்ள சுமீத் நிறுவனம் ஏற்கெனவே பணியில் இருந்த 70 பேரில் 20 பேரை முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது. மேலும், புதிதாக 50 பேரை பணியில் சேர்த்துள்ளது.
ஒப்பந்த நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக மற்ற 50 பணியாளர்களும் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 50 பேரையும் அவர்கள் பணிக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, அனைத்துப் பணியாளர்களையும் பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஏஐசிசிடியு மாநில செயலாளர் வீரசெல்வன் தலைமையில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் கிளையான அரசு பெரியார் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
