வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் யார் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பது தொடர்பாக Lok Poll நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய் ஈர்க்கும் ஜென் ஸி வாக்குகள்
இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடிகர் விஜய்யின் தவெக வருகையால் புதுவிதமான களமாக மாறியுள்ளது. ஜென் ஸி வாக்குகள், இளைஞர்கள், பெண்கள், முதல் தலைமுறை வாக்குகள் விஜய்க்கு கைகொடுக்கும் எனப் பேசப்படுகிறது. இந்த சூழலில் பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் Lok Poll நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சியை கைப்பற்றும் – கருத்துக்கணிப்பு முடிவுகள்
- திமுக கூட்டணிக்கு 181 முதல் 189 இடங்களும்,
- அதிமுக கூட்டணிக்கு 38 முதல் 42 இடங்களும்,
- தவெகவிற்கு 8 முதல் 10 இடங்களும் கிடைக்கும்.
- நாம் தமிழர் கட்சி எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறாது.
- வாக்கு சதவீதமாக பார்த்தால், திமுக கூட்டணி 40.1 சதவீதம்,
- அதிமுக கூட்டணி 29 சதவீதம்,
- தவெக 23.9 சதவீதம்,
- நாம் தமிழர் 4.9 சதவீதம்,
- இதர கட்சிகள் 2.1 சதவீதம் எனப் பெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?
முதலமைச்சருக்கான ரேஸில் மு.க.ஸ்டாலின் 41 சதவீதம், எடப்பாடி பழனிசாமி 24.1 சதவீதம், விஜய் 27.1 சதவீதம் என தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் மண்டல வாரியாக கிடைத்துள்ள முடிவுகள் தான் பேசுபொருளாக மாறியுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்தாலும், மேற்கு மண்டலத்தில் பெரிய பின்னடைவை சந்தித்தது.
அதன்பிறகு செந்தில் பாலாஜி மூலம் அதிக கவனம் செலுத்த தொடங்கினர். கோவையை மையமாக வைத்து பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் புதிய தொழில் முதலீடுகள் குவியும் வகையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் எழுச்சி
இதற்கிடையில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாக மாறியது. அதன்பிறகு நடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் மேற்கு மண்டலம் முழுவதும் அதிமுகவை பின்னுக்கு தள்ளியது. இந்த சூழலில் 2026 தேர்தலில் மேற்கு மண்டலத்தை விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் அமைச்சர்கள், உள்ளூர் பிரபல தலைவர்கள், நம்பிக்கைக்குரிய புதியவர்கள் என கொங்கு பகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார். இதற்கு சற்றும் சளைக்காத வகையில் திமுகவும் வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சார களம் எனப் பலவற்றை செய்து கொண்டிருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு வாய்ப்பு
இந்நிலையில் Lok Poll கருத்துக்கணிப்பு முடிவில் வடக்கு, தெற்கு, டெல்டா மண்டலங்களை போலவே மேற்கு மண்டலமும் திமுகவிற்கு கைகொடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இங்கு 44 முதல் 45 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும். அதிமுக கூட்டணிக்கு 9 முதல் 10 இடங்களே கிடைக்கும். தவெகவிற்கு 2 முதல் 3 இடங்களை மட்டுமே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு மேற்கு மண்டலம் எப்படி வசமாகும்?
- மேற்கு மண்டலம் என்றால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சொல்லலாம்.
- இதில் MSME தொழிலை நம்பியிருப்போருக்கு அளிக்கப்பட்ட நலத்திட்ட அறிவிப்புகள், இலவச மின்சாரம், ஓபிசி சமூகத்தினர் மத்தியில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் ஆகியவை கோவை, ஈரோடு மாவட்டங்களில் திமுகவிற்கு கைகொடுக்கும்.
- கோவை நகரப் பகுதிகளில் உள்ள தொகுதிகளில் பாஜகவின் இந்துத்துவ தேசியவாதம் மீதான ஈர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓரளவு கைகொடுக்கும் என்பதால் 2, 3 சீட்கள் கைமாறக்கூடும்.
- ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கொங்கு வேளாளர் வாக்குகள் அதிமுக மற்றும் தவெக இடையில் பிரிவதால் பலமுனைப் போட்டி ஏற்பட்டு, திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறும்.
- திருப்பூர் பின்னலாடை துறையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் விஜய் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் வலுவான உள்ளூர் தலைவர்கள் இல்லாததால் அதிமுகவின் பாரம்பரிய கவுண்டர் சமூக வாக்குகள் பலவீனமடைந்துள்ளன.
- நீலகிரி தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் மத்தியில் திமுகவிற்கு ஆதரவு தொடர்கிறது. இதற்கு சிஐடியூ தொழிற்சங்கத்தின் வலுவான பின்னணியும் ஒரு காரணம்.
