2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! – congress candidates announcement for 2026 tamil nadu assembly elections

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Congress Candidate List
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது பெரும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

27 முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டியிடவுள்ள 27 முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த பட்டியல், அக்கட்சியின் தேர்தல் பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த பட்டியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மற்றும் புதிய முகங்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சங்கரன்கோவில்

குறிப்பாக, பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களை காங்கிரஸ் களம் இறக்கியுள்ளது. பொன்னேரி தனித் தொகுதியில் துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் கே. செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் உத்தங்கரை தொகுதியில் ஆர். குப்புசாமி, ஆத்தூர் தொகுதியில் எஸ்.கே. அர்த்தநாரி, துறையூர் தொகுதியில் எம். விச்சு லெனின் பிரசாத் மற்றும் சங்கரன்கோவில் தொகுதியில் சங்கை கணேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரி

சென்னையின் முக்கிய தொகுதியான வேளச்சரியில் ஜே.எம்.எச். ஆசன் மௌலானா போட்டியிடுகிறார். கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை, கிருஷ்ணகிரியில் டாக்டர் ஏ. செல்லக்குமார், ஈரோடு கிழக்கில் கோபிநாத் பழனியப்பன், கவுண்டம்பாளையத்தில் கே.பி. சூர்ய பிரகாஷ் மற்றும் சிங்கநல்லூர் தொகுதியில் செல்வி வி. ஸ்ரீநிதி நாயுடு ஆகியோர் களம் காண்கின்றனர். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் காங்கிரஸ் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடலூரில் ஏ.எஸ். சந்திரசேகரன், மயிலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகமது, அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன் மற்றும் காரைக்குடியில் எஸ். மாங்குடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருவாடானை தொகுதி

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உசிலம்பட்டியில் டி. சரவண குமார் மற்றும் சிவகாசியில் கணேசன் அசோகன் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை தொகுதியில் ராம கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டத்தில் எஸ். ஊர்வசி அமிர்தராஜ், அம்பாசமுத்திரத்தில் வி.பி. துரை மற்றும் நாங்குநேரியில் ரூபி மனோகரன் ஆகியோர் அக்கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளான குளச்சலில் டாக்டர் தாரகை கத்பர்ட், விளவங்கோட்டில் டி.டி. பிரவீன் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.எம். தமிழ்குமரன்

சோளிங்கர் தொகுதியில் ஏ.எம். முனிரத்தினம் மற்றும் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.எம். தமிழ்குமரன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். உதகமண்டலம் தொகுதியில் பி. ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பானது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்திலிருந்து வெளியான இந்த பட்டியல், தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரப் பணிகள்

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தற்போதே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டிற்குப் பிறகு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த வேட்பாளர்களை முன்நிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது. மீதமுள்ள ஒரு மேலூர் தொகுதிக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்த வேட்பாளர்கள் பட்டியலை பார்க்கும் போது சிட்டிங் எம் எல் ஏக்கள் 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.