சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வின் முதல் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்-அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா ஆகியோர் தலைமையிலான கூட்டணியில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தலை சந்திக்க விஜய்யின் த.வெ.க. தீவிரமாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து களம் காண்கிறது. இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்க உள்ளார். இதற்கான கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்க உள்ளது.
இதில், தமிழகத்தில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 30 வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்து, பேசுகிறார். வேட்பாளர் அறிமுகத்தை தொடர்ந்து, நாளை (30-ந்தேதி) ஒரே நாளில் த.வெ.க. வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே சென்னையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் நாளை (திங்கட்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் த.வெ.க. சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே, த.வெ.க. சார்பில் புதிய பிரசார இடம் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் விஜய் நாளை (திங்கட்கிழமை) பிரசாரத்தை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் போட்டியிட உள்ள பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. நேடியாக போட்டியிடவில்லை. கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் தி.மு.க. நேரடியாக களம் காண்கிறது. எனவே விஜய்க்கும்-தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
