நியூயார்க்
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தின் வடக்கே நேற்று காலை 9 மணியளவில் வானை கிழித்து கொண்டு எரிகல் ஒன்று சென்றது. எரிபந்து போன்று ஒளிர்ந்தபடியே அது சென்றது. ஒஹியோ, பென்சில்வேனியா மாகாணங்களிலும், நியூயார்க் மற்றும் மிச்சிகன் நகரங்களிலும் பகலில் தெளிவாக இதனை பார்க்க முடிந்தது.
அப்போது, 250 டன் எடை கொண்ட டி.என்.டி. என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போன்ற பலத்த சத்தமும் விண்ணை பிளந்துள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். இதுதொடர்பாக சில வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகின. பொதுவாக இதுபோன்ற எரிகல் இரவு நேரத்திலேயே பூமியை கடக்கும்.
ஈரானுடன் மோதல் நடந்து வரும் சூழலில், இதனை மக்கள் முதலில் ஏவுகணை தாக்குதல், விமான விபத்து, வெடிகுண்டு என பல்வேறு நிகழ்ச்சிகளாக நினைத்து பயந்துள்ளனர்.
ஆனால், அது விண்ணில் இருந்து வந்த ஓர் எரிகல் என விஞ்ஞானிகளும், நாசா குழுவினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். 7 டன் எடையும் மற்றும் 2 மீட்டர் பரப்பளவும் கொண்ட அந்த விண்கல், பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 45 ஆயிரம் மைல் வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது. அப்போது, அது உடைந்துள்ளது.
இதனால், பலத்த சத்தம் கேட்டுள்ளது. 250 டன் எடை கொண்ட டி.என்.டி. வெடிக்கும்போது ஏற்பட்ட ஆற்றலும் வெளிப்பட்டு உள்ளது. இந்த சத்தத்தில் வீடுகள் குலுங்கின. ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. இந்த பயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அவசரகால தொலைபேசியில் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளனர்.
எரிந்து கொண்டே, ஒளியை உமிழ்ந்தபடி வந்த அந்த எரிகல், ஈரி என்ற ஏரியின் நீர்பரப்புக்கு மேலே 30 மைல்கள் தொலைவில் முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் 34 மைல்கள் தூரத்திற்கு காற்றில் பயணித்து, ஒஹியோவின் கிளீவ்லேண்ட் நகரின் வேலி சிட்டி பகுதியில் உடைந்து விழுந்துள்ளது. அதன் உடைந்த பாகங்கள் நிலத்தில் கிடக்கும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும், அது உறுதி செய்யப்படவில்லை.
