5 பேர் பலி.. மீட்பு நடவடிக்கையின் போது தாக்குதல்.. அமெரிக்க C-130 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவிப்பு..!

மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவின் F-15E Strike Eagle ரக போர் விமானம் ஈரான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு பணியாளர்கள் கொண்ட அந்த போர் விமானம் வீழ்ந்ததாக கூறப்பட்டது. இதில் ஒருவரை சனிக்கிழமை அமெரிக்கா மீட்டதாகவும், இரண்டாவது பணியாளரையும் பின்னர் பாதுகாப்பாக மீட்டதாகவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரான் தரப்பு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மீட்பு நடவடிக்கையின் போது, இரண்டு Black Hawk ஹெலிகாப்டர்கள், ஒரு C-130 Hercules விமானம் மற்றும் ஒரு A-10 Warthog தாக்குதல் விமானம் ஆகியவை தாக்கப்பட்டு எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு ஈரானில் இந்த நடவடிக்கையின் போது குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், அவர்கள் பொதுமக்களா அல்லது இராணுவத்தினரா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ஃபஹான் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கை “தோல்வியடைந்தது” எனவும், இஸ்ரேலிய ட்ரோன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்க இராணுவம் இதுவரை எந்த விமான இழப்பையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஈரானின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ அதிகாரியை மீட்ட நடவடிக்கையை “துணிச்சலானது” என பாராட்டினார்.

மீட்கப்பட்ட அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் “மிகவும் மதிக்கப்படும் கர்னல்” என்று டிரம்ப் குறிப்பிட்டார். எதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஈரானின் ஆபத்தான மலைப்பகுதியில் அவர் சிக்கியிருந்தாலும், அவரது இருப்பிடம் 24 மணி நேரமும் அமெரிக்க படைகளால் கண்காணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனது உத்தரவின் பேரில் பல போர் விமானங்கள் அனுப்பப்பட்டு அந்த அதிகாரி மீட்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். மீட்கப்பட்ட அதிகாரிக்கு சிறிய காயங்கள் உள்ளன, ஆனால் அவர் விரைவில் குணமடைவார் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், “இது ஒரு அற்புதமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை. இதற்கு முன் மற்றொரு விமானியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களால் இரண்டாவது மீட்பு உடனடியாக அறிவிக்கப்படவில்லை,” எனவும் அவர் கூறினார்.

மேலும், “எதிரி பகுதிக்குள் சென்று இரண்டு அமெரிக்க விமானிகளை தனித்தனியாக மீட்பது இராணுவ வரலாற்றில் இதுவே முதல் முறை. எங்கள் வீரர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்” என டிரம்ப் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.



Source link