சென்னை,
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்து உள்ளது. இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்பட உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்டு பெற்று வருகின்றன. அந்தவகையில், இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.
கடந்த முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இது குறித்த ஆலோசனை கூட்டம் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். திமுகவுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை ஒதுக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த முறை வழங்கிய 6 தொகுதிகளை போலவே இந்த முறையும் 6 தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் இந்த அவசர செயற்குழு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்பு மாநிலக்குழு கூட்டம் நடை பெற இருக்கிறது. செயற்குழு கூட்டத்தில் 6 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலக்குழு உறுப்பினர்களிடமும் கருத்துகள் கேட்டு விட்டு திமுக தரும் 5 தொகுதிகளை வாங்கி கொள்வதா இல்லை 6 தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுப்பதா என்று முடிவுகள் எடுக்கப்படும் என்று தீவிரமான ஆலோசனையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
