5-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவள்ளூரில் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரண்டு நகரங்களில் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரத்தை கடந்த மாதம் 31-ந்தேதி அவரது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்கினார்.

ஏற்கனவே 3 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 4-வது கட்ட பிரசாரத்தை தஞ்சாவூரில் நேற்று தொடங்கினார். நேற்று மாலை தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர். கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளார்.

இன்று இரவு 7 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

இதனிடையே திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது திமுக வேட்பாளர் செல்லப்பாண்டியை ஆதரித்து வாக்குசேகரிப்பில் அவர் ஈடுபட்டார்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான 5-வது கட்ட பிரசாரத்தை வரும் 13-ம் தேதி திருவள்ளூரில் தொடங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். இதன்படி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலையில் ஏப்.13-ம் தேதி மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். ஏப். 14ம் தேதி மாலை 5 மணிக்கு வேலூரிலும், இரவு 7 மணிக்கு திருப்பத்தூரிலும் பிரசாரம் செய்கிறார்.ஏப்.15-ம் தேதி காரிமங்கலம், சேலம் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Source link