50-50 OFFER-ஐ நிராகரித்த விஜய்.. 234-லும் தனித்து போட்டி.. பேரத்துக்கு அடிபணியாத விஜய்.. ஆதவ் தகவல்! – adhav arjuna reports that a 50 50 offer was negotiated with tvk vijay

தவெக தலைவர் விஜய்யிடம் 50-50 ஆஃபர் கொடுத்து பேரம் பேசியதாகவும், நீங்கள் 90 நாங்கள் 90 என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து உள்ளார்.

முக்கிய அம்சங்கள்:

  • தவெக தலைவர் விஜய்யிடம் போடப்பட்ட டீல்
  • 50-50 ஆஃபரை நிராகரித்த விஜய்
  • 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி
TVK Vijay Alliance Talks
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் பணிகள் தீவிரம்

இந்த நிலையில் திமுக, அதிமுக, நாதக உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

நான்கு முனைப் போட்டி

தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவுவதாககவும் கூறப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் 2026 தேர்தலில் புதிதாக களம் காண இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

தவெக தனித்து போட்டியா?

இதில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. அதில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தற்போது வரை கூட்டணி போட்டியா? இல்லை தனித்துப் போட்டியா? என்பது தொடர்பான சந்தேகம் இருந்து வந்தது.

தே.ஜ. கூட்டணியில் விஜய் – இரு தரப்பிலும் மறுப்பு

கடந்த வாரம் முழுவதுமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்ற தகவல்களும் வெளியாகி வந்தன. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களும், அதே போல தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் மறுத்து வந்தனர். கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறினர்.

கொளத்தூரில் தவெக பொதுக்கூட்டம்

இந்த நிலையில் தான் நேற்று (மார்ச் 17 ஆம் தேதி) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கொளத்தூரில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

50-50 பேரம் பேசியதாக ஆதவ் அர்ஜுனா பேச்சு

விஜய்க்கு 50-50 ஆஃபர் எல்லாம் கொடுத்தார்கள். நீங்கள் 90 தொகுதிகள், நாங்கள் 90 தொகுதிகள் என்று பேரம் பேசினார்கள். குறிப்பாக 2.5 ஆண்டுகள் நீங்கள் முதல்வராக ஆளலாம் போன்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் அவை அனைத்தையும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிராகரித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

வெளிப்படையாக பேசப்போகும் விஜய்_ தேர்தலுக்கு முன்பே அறிவிப்பு_

234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி

இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைத்து போட்டியிடப் போவதில்லை, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்பது உறுதியாகி விட்டது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனாவின் இந்த தகவலும் மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது.