உத்தரப்பிரதேச மாநிலம் ஹம்பூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு அனைவரும் மகிழ்ச்சியுடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் அந்த பேருந்தில் சென்றனர்.. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த கனரக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் மணமகனின் தந்தை யூனிஸ் குரேஷி மற்றும் ஓட்டுநர் அசோக் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மகிழ்ச்சியாக இருந்த திருமண வீடு, திடீர் விபத்தால் மரண ஓலங்கள் நிறைந்த சுடுகாடாக மாறியது அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. இது தொடர்பாக ஹம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓட்டுனரின் தூக்க கலைப்பே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
