குளச்சல்,
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாகுடியிருப்பு வடக்கு கடற்கரை திரேஷ்புரத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 44), மீன்பிடி தொழிலாளி. இவர் தற்போது குமரி மாவட்டத்தில் அம்மாண்டி விளையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அத்துடன் குளச்சல் அருகே உள்ள மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
விசைப்படகு உரிமையாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அலெக்ஸ் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று உதவிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த உரிமையாளரின் 11 வயது மகள் 6-ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அலெக்ஸ், விசைப்படகு உரிமையாளர் வீட் டுக்கு சென்றார்.
அங்கு தனியாக இருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி சத்தம் போட்டார். உடனே அலெக்ஸ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து சிறுமி அழுது கொண்டே பக்கத்து வீட்டுக்கு சென்று உறவுக்கார பெண்ணிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். அந்த தகவல் உடனே சிறுமியின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு விரைந்து வந்து மகளை தேற்றினார். இதனை தொடர்ந்து அவர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அலெக்ஸ் மீது போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
