தமிழக வெற்றிகழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் சொத்து மதிப்புகள் வெளியாகி உள்ளது.
அரசியலுக்கு புதுவரவான தமிழக வெற்றிகழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சி தொடங்கிய விஜய் ஊழல் ஒழிப்பு என்ற பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் அறிவித்து அரசியலுக்குள் நுழைந்தார்.
விஜய் அரசியல் வந்த நாள் முதலே அவருக்கு ரசிகர்களின் சமூக வரவேற்பு அவருக்கு இருந்தது. இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளர் முகமாக களமிறங்கும் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காகத் தான் நேற்று விஜய்யோடு சேர்த்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
புஸ்ஸி ஆனந்த் சொத்து மதிப்பு
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தங்களின் சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை வேட்பாளர்கள் அளிப்பார்கள், அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் பகிர்ந்த பிரமாண பத்திரத்தில் இந்த 2024 முதல் 25 -க்கான நிதி ஆண்டில் ஆனந்தின் ஆண்டு வருவாய் 7,25,000 ஆக இருந்திருக்கிறது.
மேலும் அவரிடம் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம், டொயோட்டா இன்னோவா, மாருதி ஸ்விப்ட் உள்ளிட்ட வாகனங்கள் இருக்கின்றன. மேலும் ஆனந்திடம் 88 கிராம் தங்க நகை இருக்கிறது. மேலும் அவர் மனைவி வசம் 1240 கிராம் நகை இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக அசையும் மற்றும் அசையா சொதுக்களை சேர்த்து 2,04,91,418 ரூபாயிலான சொத்து மதிப்புகள் இருக்கின்றன.
விஜயின் சொத்து மதிப்பு
இந்த சூழலில்தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் சொத்து மதிப்பும் நேற்றைய தினம் வெளியாகி இருந்தது. விஜய் அளித்த பிரமாண பத்திரத்தில் சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைத்தது.
அதில் விஜய் தனது தாய், தந்தை, மனைவி, மகன் மற்றும் மகள் என குடும்பத்திற்கே கடன் கொடுத்திருக்கிறார். அதோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் ரூ.3 கோடி கடன் கொடுத்துள்ளார்.
மேலும் விஜயின் அசையும் சொத்துக்கள் ரூ.404 கோடி எனவும் அசையா சொத்துக்கள் ரூ.220 கோடி எனவும் அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் பூர்வீக சொத்து மதிப்பு 28 கோடியாக அவர் குறிப்பிட்டு இருந்தார். மற்றும் தங்க நகைகள் 110 சவரன் தங்கம் கையிருப்பில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் மனைவி வசம் ரூ. 4.7 கோடியில் 3132 கிராம் தங்கமும் ஒரு கோடி மதிப்பில் வைரமும் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விஜயின் மனைவி பெயரில் 15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும் ரூ.115 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக அந்த பிரமாண பத்திரத்தில் விஜய் தகவல் அளித்திருக்கிறார்.
