9 போலீசாருக்கு தூக்கு தண்டனை விதித்தது ஏன்? – 650 பக்க தீர்ப்பில் நீதிபதி விளக்கம்

சென்னை,

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நேற்று 9 போலீசாருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது 650 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அதில் நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்து உள்ள சாராம்சங்கள் சிலவற்றை பின்வருமாறு காணலாம்.

போலீஸ் நிலைய மரணங்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு முதல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு வரையிலும் போலீஸ் நிலையங்களில் நடக்கும் சித்ரவதை மரணங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். தமிழக காவல்துறையில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர்.

பொதுவாக போலீஸ் நிலையங்களில் நடந்த குற்றச்சம்பவங்களுக்கு நேரடி சாட்சிகள் இருக்காது. இந்த வழக்கில் கேமரா காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. சக பெண் போலீசார் உள்பட போலீஸ்காரர்களும் இந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளனர். போலீஸ் நிலையங்களில் நடக்கும் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று தமிழக அரசு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல மத்திய அரசு சார்பிலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையிலேயே இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும் என இந்த கோர்ட்டு முடிவு செய்தது. இனியும் இவ்வாறு நிகழக்கூடாது என்பதற்கு உதாரணமாகவும், குற்றவாளிகள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்பதாலும் பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் நினைப்பதாலும் 9 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

Source link